மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? மட்டக்களப்பை மீன் பாடும் தேன் நாடு என்று ஏன்சொல்கிறார்கள்
இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம், உலகளவில் 'மீன் பாடும் தேன் நாடு' என்றே வர்ணிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் இருந்து இசை எழும்புவது சாத்தியமா? அல்லது இது வெறும் நம்பிக்கையா? என்பது குறித்துப் பல ஆய்வுகள் இன்றுவரை நடந்தவண்ணம் உள்ளன. மட்டக்களப்பு வாவியில் இருந்து எழும் அந்த விசித்திர இசை குறித்த சுவாரசியமான தகவல்களை இங்கே காண்போம்.
தமிழ் வியூகம் ஆசிரியா பீடம்,
1. பாடும் மீன்கள்: வரலாற்றுச் சான்றுகள்
18-ம் நூற்றாண்டு முதலே மட்டக்களப்பு வாவியில் ஒரு வகை இசை ஒலிப்பதாக மக்கள் நம்பினர். குறிப்பாக, கல்லடிப் பாலத்தின் அடியில் அமைதியான நள்ளிரவு நேரங்களில், ஆழமான பகுதியில் இருந்து ஒரு மெல்லிய இசை எழும்புவதை மீனவர்கள் அவதானித்தனர்.
அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் மருத்துவச் சுமை - ஓர் விரிவான அலசல்
அறிவியல் பூர்வமான பதிவு: 1960-களில் Fr. Lang என்னும் பாதிரியார், ஒரு பூரணை இரவில் மீனவர்களின் உதவியுடன் வாவியின் அடியில் ஒலிவாங்கியை (Microphone) பொருத்தி ஆய்வு செய்தார்.
ஒலிபரப்பு: சுமார் 8 நிமிடங்கள் வரை மீன்கள் எழுப்பிய அந்த விசித்திர இசையைப் பதிவு செய்து, ஒலிபெருக்கி மூலம் நகர் மக்கள் அனைவருக்கும் கேட்கச் செய்தார். இந்தப் பதிவு பின்னர் உலகப் புகழ்பெற்ற B.B.C வானொலியிலும் ஒளிபரப்பப்பட்டு, மட்டக்களப்பின் புகழை உலகறியச் செய்தது.
2. சுனாமிக்குப் பின் மாறிய சூழல்
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலைக்குப் பிறகு, மட்டக்களப்பு வாவியில் இந்த இசை கேட்பது நின்றுபோனதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். அந்த அபூர்வ மீன் இனம் அழிந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. இருப்பினும், 2014-ம் ஆண்டு மீண்டும் மட்டக்களப்புக்கு வந்த B.B.C குழுவினர், தங்கியிருந்து ஆய்வு செய்து மீன்களின் இசைக்கச்சேரியை மீண்டும் பதிவு செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தினர்.
3. 'மீன் பாடும்' - இலக்கிய மற்றும் இடப்பெயர் ஆய்வு
அறிவியல் ஒருபுறம் இருக்க, தமிழ் இலக்கியங்கள் 'பாடு' என்ற சொல்லுக்கு வழங்கும் விளக்கங்கள் சுவாரசியமானவை.
பாடு என்பது தொழிற் பெயர்: சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம் மற்றும் இராமாயணத்தில், 'பாடு' என்பது ஒரு தொழிலைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது (உதாரணம்: ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்).
மீன்பிடித் தொழில்: மீனவர்கள் தாங்கள் மீன்பிடிக்கும் இடத்தைப் 'பாடு' என்று அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. வங்காலைப்பாடு, தாழ்வுபாடு, கள்ளப்பாடு போன்ற பெயர்கள் இதற்குச் சான்றாகும்.
எனவே, 'மீன் பாடு' (மீன் பிடிக்கும் இடம்) என்பது காலப்போக்கில் 'மீன் பாடும்' என்று மருவியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் ஒரு கருத்தாகும்.
4. தேன் நாடா? அல்லது தென் நாடா?
'மீன் பாடும் தேன் நாடு' என்ற தொடரில் வரும் 'தேன்' என்பது வளத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டாலும், அது 'தென்நாடு' என்பதன் மருவலாகவும் இருக்கலாம்.
சிவ பூமி: "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று தேவாரப் பாடல்கள் இலங்கையைச் சிவபூமியாகக் குறிப்பிடுகின்றன.
இராமாயணச் சான்று: கம்பராமாயணத்தில் இலங்கை 'தென்பாண்டி நாடு' என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, 'மீன் பாடு - தென்நாடு' என்பதே காலப்போக்கில் செவிவழிக் கதைகள் மூலம் 'மீன் பாடும் தேன் நாடு' என அழகான சொல்லாடலாக மாறியிருக்க வாய்ப்புண்டு.
5. மட்டக்களப்பு பெயர்க் காரணம்
'மட்டம்' என்றால் சமதளம் அல்லது வாழைக்கன்று எனப் பொருள்படும். 'களப்பு' என்பது கடல் நீர் நிலத்தினுள் புகும் ஓதப்பகுதியைக் குறிக்கும். மட்டு (அளவு), மட்டி (கடலுயிரி) போன்ற சொற்களும் இந்த மண்ணின் வளத்தோடும் உணவோடும் பிணைந்தவை.
மட்டக்களப்பின் பாடும் மீன்கள் என்பது வெறும் கற்பனையல்ல; அது அறிவியல் மற்றும் இலக்கிய ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு அதிசயம். செவிவழிக் கதைகள் சில நேரங்களில் உண்மையை மறைத்தாலும் அல்லது திரித்தாலும், அவை ஒரு இனத்தின் அடையாளத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. ஈழத் தமிழர்களின் வரலாற்றைச் சங்க இலக்கியங்களின் துணை கொண்டு தேடும்போது, இன்னும் பல வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படும்.
நன்றி ஜெகன் ஊடகவியலாளர்
@tamilviyugam

COMMENTS