பண்டார வன்னியனின் சகோதரி நல்ல நாச்சியின் காதல் பற்றி தெரியுமா உங்களுக்கு
இலங்கை வரலாற்றில் வன்னி நிலப்பரப்பு என்பது என்றும் எவருக்கும் அடிபணியாத 'வணங்கா மண்'. போர்த்துக்கீசியர்களால் கூடக் காலூன்ற முடியாத இந்த வீர மண்ணை, ஒல்லாந்தர்களும் ஆங்கிலேயர்களும் கைப்பற்ற முயன்றபோது, அவர்களைத் திணறடித்த சிம்மசொப்பனம் மாவீரன் பண்டார வன்னியன். குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் வீரம் நாம் அறிந்தது, ஆனால் அவரது குடும்பம் மற்றும் சகோதரி நல்ல நாச்சாள் பற்றிய தகவல்கள் பலருக்குப் புதியவை.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்,
1. பண்டார வன்னியனின் குடும்பப் பின்னணி
பண்டார வன்னியனுக்குத் துணையாக இரண்டு சகோதரர்கள் இருந்தனர். மூத்த தம்பி கயிலாய வன்னியன் அமைச்சராகவும், கடைசி தம்பி பெரிய மெய்யனார் (பெரிய மைனர்) படைத்தளபதியாகவும் இருந்து வன்னி அரசை வழிநடத்தினர். இவர்களுக்கு நல்ல நாச்சாள் என்ற ஒரு அன்புச் சகோதரி இருந்தார்.
2. தங்கை நல்ல நாச்சாள்: காதலும் வீரமும்
பண்டார வன்னியனின் சகோதரி நல்ல நாச்சாளுக்குக் கலைகள் கற்பிக்க வந்தவர் அவைப்புலவன். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதேசமயம், வன்னியின் மற்றொரு குறுநில மன்னனான காக்கை வன்னியன், நல்ல நாச்சாளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு ஓலை அனுப்பினான். ஆனால் பண்டார வன்னியன் அதற்குச் சம்மதிக்கவில்லை.
குறைந்த முதல் அதிக லாபம் தரும் இயற்கை சோப்பு தயாரிப்பது எப்படி? முழு வழிகாட்டி-சுயதொழில்
ஒருமுறை நந்தவனத்தில் நல்ல நாச்சாளும் புலவரும் இருப்பதைக்கண்டு சண்டைக்கு வந்த காக்கை வன்னியனை, புலவர் தனது வாள்வீச்சால் நையப்புடைத்து விரட்டினார். புலவரின் வீரத்தைக் கண்டு அவர் சாதாரணமானவர் அல்ல, அரச பரம்பரை என்பதை உணர்ந்த பண்டார வன்னியன், அவர்களின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினார். இதுவே காக்கை வன்னியனுக்குப் பண்டார வன்னியன் மீது தீராத பகையாக மாறியது.
3. வெள்ளையர்களை அதிர வைத்த வீர வசனங்கள்
ஆங்கிலேய தேசாதிபதி பண்டார வன்னியனைப் பணியச் சொல்லி அழைத்தபோது, அவர் காட்டிய வீரம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
தேசாதிபதி: "பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு."
பண்டார வன்னியன்: "பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலேயே கிடையாது. ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டாரனா ஆங்கிலேயனுக்கு அடங்கப் போகிறான்?"
தேசாதிபதி: "பாம்புடன் விளையாடுகிறீர்!"
பண்டார வன்னியன்: "பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி, விருந்தாயிருக்க மாட்டேன்."
இப்படியாக, முல்லைத்தீவு கோட்டையைத் தாக்கி, ஆங்கிலேயர்களின் பீரங்கிகளைக் கைப்பற்றிய முதல் மன்னனாகப் பண்டார வன்னியன் திகழ்ந்தார்.
4. காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பு
நேரடிப் போரில் பண்டார வன்னியனை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், காக்கை வன்னியனைப் பயன்படுத்தினர். "மறப்போம் மன்னிப்போம்" என்ற உயரிய பண்பால் காக்கை வன்னியனை மீண்டும் சேர்த்துக் கொண்டார் பண்டார வன்னியன். ஆனால், தந்திரமாக அவரைத் தனியே அழைத்துச் சென்று, ஒட்டிசுட்டான் என்னுமிடத்தில் ஆங்கிலேயப் படைகளிடம் சிக்க வைத்தார் காக்கை வன்னியன். இன்றும் ஈழத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை "காக்கை வன்னியன் பரம்பரை" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.
5. சிங்கள மக்களுடனான தோழமை
ஆங்கிலேயர்கள் கண்டி ராச்சியத்தைக் கைப்பற்ற முயன்றபோது, தனது தம்பிகளின் ஆலோசனைப்படி கண்டி மன்னனுக்கும் சிங்கள மக்களுக்கும் ஆதரவாகத் தனது படைகளை அனுப்பினார் பண்டார வன்னியன். "எமது உடன்பிறப்பாகிய சிங்கள மக்களையும் கண்டி நாட்டையும் காப்பதே தர்மம்" என்று அவர் முழங்கினார். இது அந்நாளில் நிலவிய இன ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நினைவுச் சின்னம்:
வன்னியின் கற்சிலைமடு பகுதியில் பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடத்தில்தான் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. கற்பூரப் புல் வெளியில் ஒரே வாள்வீச்சில் 60 பேரைக் கொன்ற அந்த வரலாற்று நாயகனின் வீரம் இன்றும் வன்னி மண்ணில் காற்றில் கலந்திருக்கிறது.
நன்றி:-
தொகுப்பு: தமிழரசு
@tamilviyugam

COMMENTS