வைத்தியத் துறைக்குள் அரசியல் புகுந்துவிடக் கூடாது அற்ப அரசியலுக்காக மருத்துவத் துறையை பயன்படுத்தக் கூடாது என்பதில் அவதானமாக செயற்படுபவர் மன்...
வைத்தியத் துறைக்குள் அரசியல் புகுந்துவிடக் கூடாது அற்ப அரசியலுக்காக மருத்துவத் துறையை பயன்படுத்தக் கூடாது என்பதில் அவதானமாக செயற்படுபவர் மன்னார் பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரக தற்போது கடமையாற்றி வரும் விஷேட வைத்திய நிபுணர் தர்மராஜ் வினோதன் அவர்கள் இவை தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருபவர் தற்போது அவர் வெளியிட்ட கருத்து ஒன்று இங்கு பகிரப்பட்டுள்ளது
கடந்த மாதம் நாடளாவிய ரீதியில் 3,147 தாதியர்களுக்கு முதல் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது. இலங்கை சுகாதாரத்துறை வரலாற்றில் மிகவும் அதிகளவு தாதியர்கள் ஒரே தடவையில் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்வாக இது பதிவு செய்யப்பட்டது.
அதற்காக தேசிய மக்கள் சக்தி அரசு பாராட்டப்படவேண்டும்.
முந்தைய நியமனம்:இதற்கு முன்னர் 2023 இல் 2500 வரையானோருக்கு ஒரே தடவையில் நியமனம் வழங்கப்பட்டது வடக்கிலும் புதிய நியமனம் பெற்ற சுமார் 500 வரையான தாதியர்கள் நியமனம் செய்யபட்டனர். இவர்களில் சுமார் அரைவாசிப்பேர் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் செய்யப்பட்டனர். \
இடமாற்றம் பெறுவோர்
அந்த வைத்தியசாலையில் இருந்து சுமார் 200 பேர் வரையில் இடம்மாற்றம் பெற்றுச்செல்கின்றனர். எவ்வாறாயினும் சுமார் 75 வரையிலான தாதியர்களின் எண்ணிக்கை அந்த வைத்தியசாலையில் அதிகரித்துள்ளது.
வட மாகாணசபை வைத்தியசாலைகளின் பொறுத்தவரையில் சுமார் 280 பேர் வரையில் நியமிக்கப்பட்டு அவர்களில் சுமார் 263 பேர் வரையில் அறிக்கியிட்டனர். ஆனால் 265 பேர் இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ளனர்.
ஆளணி தடை
வடமாகாண வைத்தியசாலைகளுக்கு அரசினால் இதனைவிட அதிகளவில் தாதிய நியமனங்களை வழங்கியிருக்கமுடியுமாயினும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு வைத்தியசாலைகளினைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளில் ஆளணியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் தாதியர்களினை நியமிக்க போதிய ஆளணி காணப்படாமை ஒரு தடையாக அமைந்தது.
வங்குரோத்து தமிழ் அரசியல்வாதிகள்
நிலைமை இவ்வாறிருக்க நியமிக்கப்பட்ட தாதியர்களினையும் ஊக்கமிழக்கச் செய்யும் செயற்பாடுகளில் வழமையான வங்குரோத்து தேசியவாதிகளும் அவர்களின் சில ஆதரவாளர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக விஷமத்தனமான பிரச்சாரங்ககள் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கிற்கு: அதிகளவில் சகோதர இனத்தினைச் சேர்ந்த தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் முனகுகின்றனர். அதற்கான அடிப்படைக்காரணங்கள் தொடர்பில் அவர்கள் நன்கு அறிந்திருந்தாலும் அதனை மாற்றியமைக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ அவர்கள் முன்வருவதில்லை.
LINK:வடமாகாண மீனவர்கள் பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சர் கொழும்பில் திடீர் சந்திப்பு
பலகீனமான வட மாகாண சபை
பெரும் ஆரவாரத்துடன் அமைக்கப்பட்ட வட மாகாண சபையின் அரசியல் தலைமையின் சுகாதாரத்துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரினால் 2014 ஆம் ஆண்டு சகல மாகாணசபை உறுப்பினர்களினையும் ஒன்றுக்கூட்டி கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சின் அடைவுகள் தொடர்பிலான தரவுகள் சமர்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலுக்கான நேரம் வந்தது. அப்பொழுது மாகாணசபையின் கல்விக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் திடீரென "என்னை கொஞ்சம் அரசியல் கதைக்க விடுங்கள்" என்று ஆரம்பித்தார்.
இனக்கலப்பு ஏற்படும் அபாயம்?
"வடக்கு வைத்தியசாலைகளுக்கு மகிந்த அரசு சிங்கள தாதியர்களை அதிகளவில் நியமிக்கின்றது. இதன் மூலம் இனக்கலப்பு ஏற்படும் அபாயமுள்ளது. அதன்மூலம் வடக்கில் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக்குரியதாகும்" என்றார்.
உயர் அதிகாரிகள் மௌனம்
வழமை போலவே உயர் அதிகாரிகள் தலைகளினை கவிழ்ந்து தங்களுக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லாதது போல் மௌனமாக இருந்தனர்.
இளநிலை அதிகாரியாக வைத்தியர் வினோதன்
அந்த சந்தர்ப்பத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக 38 வயதில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக இருந்த நான் " ஐயா எங்கள் தாதியர்கள் நாளொன்றுக்கு 18 மணிநேரம் கடமையாற்றித்தான் வைத்தியாசாலைகளை சீராக இயக்குகின்றனர். எஞ்சிய ஆறு மணிநேரம் தான் அவர்கள் குளித்து, சாப்பிட்டு, நித்திரை செய்கின்றனர். அதனால் நீங்கள் அஞ்சுவது போல எதுவும் கலந்துவிடாது. தவிர வடக்கில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்பவர்கள் குறைவு, அவ்வாறு கற்று உரிய தகமைகளினை பெறுபவர்களும் தாதிய, குடும்பநல உத்தியோத்தர் பயிற்சிகளுக்கு வர விரும்புவது குறைவு. அதனால் மகிந்த அரசு வேறு வழியின்றி தென்பகுதியிலிருந்து தாதியர்களினை இங்கு நியமிக்கிறது. இந்த நிலைமையை நீங்கள் மாற்றியமைத்தால் இந்த பிரச்சனை தீரும்" என்று கூறினேன்.
அவரும் "தம்பி நீர் சின்ன ஆள் இவ்வளவு சிரேஷ்ட அதிகாரிகளும் மௌனமாக இருக்க நீர் இப்படிக்கதைக்கூடாது" என்றார். அதனை சுகாதார அமைச்சரும் ஆமோதித்தார். நான் சிரிப்புடன் "நான் அப்படித்தான் கதைப்பேன்" என்று கூறினேன்.
காரணம் என்ன?
பிரச்சனை என்னவென்றால் இந்த நிலைமை இன்றுவரை மாற்றமடைய பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எந்த முன்மாதிரியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் இன்றும் தாதியர்கள் பெருமளவில் தென்பகுதியிலிருந்து தான் நியமிக்கப்படவேண்டிய சூழ்நிலையுள்ளது.
தென்பகுதியில் இருந்து இங்கு நியமனம் பெற்று வரும் சகோதர மொழிபேசும் தாதியர்கள் தமது குடும்பங்கள், அன்புக்குரியர்களினை பிரிந்து, திருமணங்கள் தள்ளிப்போய், வயோதிபத்தாய் தந்தையர்களினை பராமரிக்கமுடியாமல் பெரும் துன்பத்தின் மத்தியில் தான் வடக்கில் கடமையாற்றுகின்றனர். அவர்களின் தியாகங்கள் அளப்பரியது.
LINK:இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அவசரத் தேவை
அற்ப அரசியல் வேண்டாம்
அவர்களின் சேவையினை பாராட்டமுடியாது விடினும் அற்ப அரசியல் நலன்களுக்காக அவர்களினை இனவாத கத்தியினால் கீறிக்கிழிக்காமல் சம்பந்தப்பட்டோர் இருக்க பழகிக்கொள்ளவேண்டும். இல்லாதுவிட்டால் அதற்கான பதிலடியினை அடுத்துவரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள்.
No comments