யாழ்ப்பாணத்தில் பலாலி என்னும் இடப்பெயர் உருவாகக் காரணம் என்ன?
கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த தமிழக பா.ஜ.க தலைவர் கு. அண்ணாமலை அவர்கள், யாழ் மத்திய கலாச்சார நிலையத் திறப்பு விழாவில் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. "இராமாயண யுத்தம் முடிந்த பின்னர் ராமருக்கு 'பாலாலயம்' நடத்தப்பட்டதால், அந்த இடம் பலாலி என்று பெயர் பெற்றது" என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தி வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
1. வரலாறு மௌனமானால் இடப்பெயர்கள் பேசும்
"வரலாறு எங்கே மௌனமாகிறதோ அங்கே இடப்பெயர்கள் வாய் திறந்து பேசும்" என்கிறார் இந்திய அறிஞர் ஸ்வாமி அவர்கள். இலங்கையைப் பொறுத்தவரை தமிழர் வரலாற்றைத் தொல்பொருள் சின்னங்கள் மட்டுமன்றி, சங்க கால இலக்கியங்கள் மற்றும் இடப்பெயராய்வு மூலமே ஆணித்தரமாக நிரூபிக்க முடியும்.
2. பலாலி - பெயர்க் காரணம் என்ன?
பலாலி என்னும் சொல்லின் வேர்ச் சொற்களைப் பிரித்து ஆராய்ந்தால், அது அரக்கர் (பூதர்) குலத்தோடும், இயற்கையோடும் பிணைந்துள்ளதைக் காணலாம்.
பலா + ஆலி: பலா என்பது முக்கனிகளில் ஒன்று. 'ஆலி' என்றால் பூதம் அல்லது அரக்கர் என்று பொருள்.
பல் + ஆலி (பல்லாலி): இராமாயணக் கதைகளின்படி, அரக்கர்களுக்குப் பற்கள் நீளமாகவும் வலிமையாகவும் இருக்கும். 'பல்' என்பது வலிமையின் அடையாளம். பெரும் பற்களைக் கொண்ட அரக்கர்கள் (பூதங்கள்) வாழ்ந்த இடம் என்பதால் 'பல்லாலி' என அழைக்கப்பட்டு, அது பின்னர் 'பலாலி' என மருவியிருக்கலாம்.
ஆலித்தல்: ஆலித்தல் என்றால் 'ஆரவாரம் செய்தல்' என்று பொருள். யுத்த களத்தில் அரக்கர் சேனை எப்பொழுதும் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்வதால் இப்பெயர் உருவாகியிருக்க வாய்ப்புண்டு.
3. ஒளவையாரின் பாடலும் 'பலா' குறியீடும்
பலா மரத்திற்கு ஒரு சிறப்புண்டு; அதை வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும். இதையே ஒளவையார் தனது பாடலில், "கூரியவாளால் குறைபட்ட கூன்பலா ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச்..." எனப் பாடுகிறார். இராமாயண யுத்தத்தில் அரக்கர்களின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அவை முளைக்கும் வலிமை கொண்டவை என இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த மீளுருவாக்கத் திறனுக்குப் 'பலா' மரம் ஒரு குறியீடாக அமைகிறது.
மன்னாரில் (CO) எனும் புதிய பதவியுயர்வு உத்தியோகத்தர்களுக்கு நியமனம்
4. அண்ணாமலையின் கூற்று: வரலாற்றுச் சான்றுகள் என்ன சொல்கின்றன?
இராமாயண யுத்தம் முடிந்த பின் இராமருக்கு 'பாலாலயம்' நடந்த இடமே பலாலி என்ற அண்ணாமலை அவர்களின் கூற்றுக்கு இலக்கியங்களில் நேரடி ஆதாரங்கள் இல்லை.
யாழ்ப்பாணத்தின் தோற்றம்: திருக்கோணேஸ்வரர் புகழ்பாடும் 'தட்சிண கைலாச புராணம்' போன்ற நூல்களின்படி, இராமாயணப் போர் முடிந்த பின்னரே யாழ்ப்பாணம் எனும் நகரம் உருவானதாகக் கருதப்படுகிறது.
அடர்ந்த காடு: இராமாயண காலத்தில் மன்னார் (மாதோட்டம்), திருக்கோணேமலை மற்றும் வன்னிப் பகுதிகள் நகரங்களாகவும் மனித வாழ்விடங்களாகவும் இருந்தன. ஆனால், யாழ்ப்பாணப் பகுதி அப்போது அடர்ந்த காடாகவே இருந்துள்ளது.
அவ்வாறு இருக்கையில், பலாலியில் பாலாலயம் நடந்ததாகக் கூறுவது வரலாற்று ரீதியாகப் பொருந்தி வரவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழக அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பல சமயங்களில் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான வரலாறுகளைத் தமிழகத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஈழத்து இடப்பெயர்கள் அந்த மண்ணின் பூர்வீக குடிமக்களான நாகர்கள், இயக்கர்கள் மற்றும் தமிழர்களின் வீர வரலாற்றைத் தனித்துவமாகப் பறைசாற்றுகின்றன. பலாலி என்பது பாலாலயத்தால் வந்த பெயர் என்பதை விட, 'ஆலி' எனப்படும் பூதர்களின் (அரக்கர்களின்) செழிப்பான நிலம் என்பதே பொருத்தமான ஆய்வாக அமைகிறது.
நன்றி:- உசாத்துணை நூல்கள்:
கம்பராமாயணம்
தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும்
இராவணன் இந்திர உலா

COMMENTS