மன்னார் மக்கள் இழந்த மாபெரும் அபிவிருத்திச் சொத்து பேசாலை துறைமுகம்
மன்னார் மாவட்டம் - திறமையும் உழைப்பும் மிக்க மக்கள் நிறைந்த பூமி. ஆனால், பல நூறு ஆண்டுகளாகப் போராடியும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாமல் தவிப்பதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? கல்வியாளர்கள் முதல் சாமானியர்கள் வரை இன்று எழுப்பும் கேள்வி இதுதான்: "மன்னாரின் வளர்ச்சியைத் தடுக்கும் அந்த 'அறியப்படாத சக்தி' எது?"
ஆய்வு, ஜெகன், ஊடகவியலாளர், மன்னார்,
1. காங்கேசன்துறை கப்பல் சேவையும் மன்னார் மக்களின் குமுறலும்
அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் காரைக்கால் பகுதிக்குப் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வடபகுதிக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இது எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை.
காங்கேசன்துறை பயணம் நான்கு மணிநேரம் எடுக்கும் என்பதோடு, வாகனக் கூலி மற்றும் நேரத்தைக் கணக்கிட்டால் மன்னார் வியாபாரிகளுக்குக் கொழும்பே இலாபகரமானதாக அமைகிறது. உண்மையில் மன்னார் மீண்டெழ வேண்டுமானால், தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த விருப்பமாகும்.
2. கைநழுவிய 'தங்கப் புதையல்': பேசாலை துறைமுகத் திட்டம்
2018-ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி அனுசரணையில், சுமார் 5,267 மில்லியன் ரூபாய் செலவில் பேசாலையில் ஒரு பாரிய கடற்றொழில் துறைமுகத்தை அமைக்க அரசு தீர்மானித்திருந்தது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது
.இலங்கைக் கடற்படையின் அதிரடி: கடல் அட்டைகளுடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கைது
ஆனால், "வெளியிடத்து மீனவர்கள் வருவார்கள், கலாச்சாரம் சீரழியும், போதைப்பொருள் பெருகும், கடற்படை கெடுபிடி அதிகரிக்கும்" என்ற சில தரப்பினரின் தேவையற்ற அச்சம் மற்றும் எதிர்ப்பு காரணமாக, இந்தத் திட்டம் முடக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகமான மணிலாவிற்கே எதிர்ப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு, ஒரு மாவட்டத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய திட்டம் திருப்பி அனுப்பப்பட்டது.
3. சந்தேகக் கற்பனைகளும் தற்போதைய யதார்த்தமும்
அன்று துறைமுகத்தை எதிர்த்தவர்கள் முன்வைத்த காரணங்கள் இன்று என்னவாகியுள்ளன?
துறைமுகம் வராத நிலையிலும் மன்னார் கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தல் குறையவில்லை.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நின்றபாடில்லை.
மீனவர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் இன்றும் தொடர்கின்றன.
எதிர்மறையான சிந்தனைகளாலும், சுயநல நோக்கங்களாலும் ஒரு மாபெரும் அபிவிருத்தி தடுக்கப்பட்டதன் விளைவாக, இன்று வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மீனவர்கள் அன்றாடத் தொழிலுக்கே திண்டாடும் நிலை தொடர்கிறது. ஒருவேளை பேசாலை துறைமுகம் அமைக்கப்பட்டிருந்தால், இன்று காங்கேசன்துறை போல் பேசாலையிலிருந்தும் இராமேஸ்வரத்திற்குப் பயணிகள் கப்பல் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.
4. தற்சார்பு பொருளாதாரமும் சுயசிந்தனையும்
மன்னார் ஒரு காலத்தில் உலக வாணிப மையமாகத் திகழ்ந்த இயற்கைத்துறைமுகம். பழைய புகழை அடையக் கிடைத்த வாய்ப்பை நாமே தட்டிவிட்டுள்ளோம். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இத்திட்டத்தைச் சிலாவத்துறைக்கு மாற்ற முயன்றபோதும், அது புவியியல் காரணங்களால் சாத்தியமற்றுப் போனது.மன்னார் மக்களுக்கான செய்தி: உங்கள் வாழ்வாதாரத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும். "அபிவிருத்தி என்பது மக்களுக்காக" - ஆனால் மக்கள் சுயமாகச் சிந்திக்கத் தவறும்போது, சிலரின் தூண்டுதலால் ஒட்டுமொத்த மாவட்டத்தின் எதிர்காலமே இருண்டு போகிறது.
"உங்கள் குடும்பம் வறுமையில் கிடந்தால் கண்டும் காணாமல் போகும் சமூகத்தில் வாழ்கிறோம். எனவே, அடுத்தவரின் கட்டளைக்கோ அல்லது தேவையற்ற அறிவுரைகளுக்கோ அடிபணியாமல், எது சரி என்று படுகிறதோ அதைச் செய்ய முன்வாருங்கள்."
பல கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்திகளை வேண்டாம் என்று சொல்வது எளிது. ஆனால், அவற்றை மீண்டும் பெறுவது என்பது அத்தனை எளிதல்ல. இழந்த வாய்ப்புகளை எண்ணிக் கவலைப்படுவதை விட, இனிவரும் காலங்களில் வரும் அபிவிருத்தித் திட்டங்களைச் சரியான புரிதலோடு அணுகுவதே மன்னாரின் எழுச்சிக்கு வழிவகுக்கும்.
@tamilviyugam

COMMENTS