Page Nav

HIDE

Breaking News:

latest

உள்ளூராட்சி சபைகளுக்கு 700 கனரக இயந்திரங்கள் வழங்கும் திட்டம்-அமைச்சர் அபயரத்ன

வன்னியிலுள்ள பெரும்பாலான உள்ளக வீதிகள் சீரின்றிக் காணப்படுவதால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக...

வன்னியிலுள்ள பெரும்பாலான உள்ளக வீதிகள் சீரின்றிக் காணப்படுவதால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 

2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின்மூலம் வன்னியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கனரக இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்னவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 

இந்நிலையில் 2026வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் மூலம் தம்மால் 700கனரக இயந்திரங்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன, வன்னியிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னுரிமையடிப்படையில் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 13.11.2025 இடம்பெற்ற பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், 

வன்னிப் பகுதியென்பது கடந்தகால உள்நாட்டு யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியென்பதுடன்,  பெரியளவிலான நிலப்பரப்பைக் கொண்ட பகுதியாகும். 

வன்னியில் பெரும்பாலான உள்ளகவீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். 

எனவே உள்ளக வீதிகளைச் சீரமைப்புச் செய்வதற்கு வன்னியிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு கனரக இயந்திரங்களை வழங்குவதன் ஊடாக பாதிப்படைந்துள்ள உள்ளக வீதிகளைச் சீரமைத்து மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கமுடியும். 

குறிப்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், மாகாண மற்றும் பிராந்திய அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திலும்  கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் "உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்கு  குறைநிரப்பல் உள்ளிட்ட செயலாற்றுகை" என்னும் திட்டத்திற்கு இந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2,500மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. 

எனவே முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்திலுள்ள உள்ளூராட்சிசபைகள் இந்தத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு, குறித்த உள்ளூராட்சிசபைகளுக்கு கனரக இயந்திரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார். 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு உழவியந்திரங்கள் உள்ளடங்கலாக 700கனரக இயந்திரத்தொகுதிகளை வழங்குவதற்குத் தீர்மானக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வருடமும் வரவுசெலவுத்திட்டத்திட்ட நிதி ஒதுக்கீட்டினூடாக இவ்வாறு உள்ளூராட்சி சபைகளுக்கு கனரக இயந்திரங்கள் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அபயரத்னவினால் பதில் வழங்கப்பட்டது. 

அத்தோடு இந்த வரவுசெலவுத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வன்னியின் உள்ளூராட்சிசபைகள் உள்வாங்கப்பட்டு கனரக இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் அபயரத்ன மேலும் இதன்போது தெவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments