கச்சதீவுக்கு பதிலாக இலங்கை வழங்கிய வாஜ்பேங் வளமிக்க கடல் பகுதி தொடர்பில் தெரிந்து கொள்ளுங்கள்
@tamilviyugam,
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு பின்னால் இருக்கும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி பற்றி தமிழக அரசியல்வாதிகளும் தமிழக மீனவர்களும் பேசுவதில்லை. அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டதுதான் இந்தத் தகவல் தொகுப்பு.
கச்சதீவு மற்றும் வாட்ஜ் பேங்க் ஒப்பந்தங்கள் (1974 - 1976)
கச்சதீவு ஒப்பந்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின்படி, கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக 'வாட்ஜ் பேங்க்' (Wadge Bank) என்னும் வளமிக்க பொருளாதார மண்டலக் கடல் பகுதியை இந்தியா பெற்றுக்கொண்டது.
வாட்ஜ் பேங்க் ஒப்பந்தம் 1976 இல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மற்றும் பின்னணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வாட்ஜ் பேங்க் என்பது யாது?: இது இந்தியாவின் கன்னியாகுமரிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் ஆழமற்ற நீர்ப்படுகையாகும். இது மீன்வளம், கடல் வளம் மற்றும் எண்ணெய் வளம் நிறைந்த ஒரு பகுதியாகும்.
வரலாற்றுப் பின்னணி: 1970களில் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, நாடுகளின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் மற்றும் கண்டத்திட்டு எல்லைகள் குறித்து விவாதம் எழுந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லைகளில் தெளிவான வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லை. இரண்டு நாட்டு மீனவர்களும் அப்பகுதியில் உரிமை கொண்டாடி வந்ததால், வாட்ஜ் பேங்க் போன்ற வளமான பகுதிகள் எந்த நாட்டிற்குச் சொந்தமானது என்பதில் குழப்பங்கள் இருந்தன.
கச்சதீவை விட வாட்ஜ் பேங்க் ஏன் முக்கியமானது?
இதற்குத் தீர்வு காணும் வகையில், வளங்கள் நிறைந்த வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா பெற்றுக்கொண்டது. கச்சதீவினால் பெரிய பிரயோசனம் இல்லை என்று உணர்ந்து கொண்டதால், அதைக் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் வரலாறுகளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதால், இதன் உண்மைத்தன்மையை அறியாத தமிழக அரசியல்வாதிகள், கச்சதீவை மீட்க வேண்டும் என்று வெற்றுக் கோஷங்களை எழுப்பி வருகின்றார்கள்.
இந்தியா தனது நாட்டின் பாதுகாப்பில் எப்பொழுதும் அக்கறையாக இருக்கும். பிராந்திய ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கச்சதீவை இனாமாக வழங்க முன்வருமா? அப்படி வழங்குவதால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமல்லவா என்று ஒரு கேள்வி எழலாம்.
இங்கு உண்மை என்னவென்றால், எப்பொழுதும் இந்தியாவின் கண்காணிப்பு வலயத்தினுள் இலங்கை இருப்பதனாலும், இந்த கடல் பகுதியில் இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபடுவதனாலும், அவ்வளவு எளிதாகக் கச்சதீவு உட்பட இந்து சமுத்திரக் கடற்பகுதிகளில் வேறு நாடுகள் ஆக்கிரமித்து இந்தியாவை அச்சுறுத்த முடியாது. இதனை உணர்ந்து கொண்டதாலேயே, இலங்கையின் கட்டுப்பாட்டில் காலி பகுதியை அண்மித்த பொருளாதார மண்டலமான வாட்ஜ் பேங்க் பகுதியைத் தனதாக்கிக் கொண்டு, கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்தது அப்போதைய இந்திரா காந்தி அரசு.
ஒப்பந்த ஆவணங்கள் சொல்லும் உண்மை
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பாக் நீரிணைப் பகுதியில் கடல் எல்லையைப் பிரிப்பதற்காக இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியிருந்தன.
முதல் ஒப்பந்தம் (1974): இதில் கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது.
இரண்டாவது ஒப்பந்தம் (1976, மார்ச் 23): இது மன்னார் வளைகுடா கடல் எல்லைப் பகுதியைப்பிரிப்பதற்கான ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரான கேவல் சிங்கும், இலங்கையின் வெளியுறவுச் செயலாளரான டபிள்யு. டி. ஜெயசிங்கவும் கையெழுத்திட்டனர். அப்போது கேவல் சிங் எழுதிய கடிதத்தில், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாட்ஜ் பேங்க் பகுதியில் இந்தியாவின் பிரதான பொருளாதார மண்டலம் அமைவதையும், அங்குள்ள வளங்கள் மீது இந்தியாவிற்கு இறையாண்மை உண்டு என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டம் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது
மேலும், அங்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது அது இலங்கைக்கு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த ஒப்பந்தங்கள் பிரத்யேகமாகக் கன்னியாகுமரி கடலை அண்மித்த வாட்ஜ் பேங்க் பகுதியின் வளங்களுக்காகவே போடப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.
வாட்ஜ் பேங்கின் பிரம்மாண்ட வளங்கள்
இந்த வாட்ஜ் பேங்க் பகுதியின் வளங்கள் பற்றித் தெரிந்தால் தலை சுற்றும்:
அமைவிடம்: கன்னியாகுமரியிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது உண்மையில் இந்தியாவின் எல்லைக்கு வெளியில், இலங்கையின் எல்லைக்குள்தான் உள்ளது.
பரப்பளவு: இதன் ஆழம் சுமார் 200 மீட்டர் மற்றும் பரப்பளவு சுமார் 6500 சதுர கிலோமீட்டர்.
மீன் வளம்: இங்கு 425 வகையான மீன் இனங்கள் இருப்பதாக இந்திய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடத்திற்கு 65,000 மெட்ரிக் தொன் மீன்கள் இங்கு பிடிக்கப்படுகின்றன.
ஏமாந்து போனது இலங்கையா?
இந்த கடல் எல்லை ஒப்பந்தத்தில் ஏமாந்து போனது இலங்கையும் இலங்கை மக்களும்தான். ஆகவே, இலங்கை அரசாங்கமானது இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்து, வாட்ஜ் பேங்க் ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சதீவோடு சேர்த்து இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதிகளை மீட்க வேண்டும் என்பது புத்திஜீவிகளின் கருத்து.
கச்சதீவுப் பகுதியானது இலங்கை நாட்டிற்கும் வடபகுதி மீனவர்களுக்கும் சொந்தமானது. எனவே, இனியாவது தமிழக அரசியல்வாதிகளும் மீனவர்களும் கச்சதீவு தொடர்பில் கேள்வி எழுப்புவதை நிறுத்தி, இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும்.
ஜெகன் ஊடகவியலாளர் தமிழ் வியூகம்

COMMENTS