ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டதற்கு அமைவாக வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவ...
ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டதற்கு அமைவாக வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வடக்குமாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கான அலுவலகம் அமைப்பதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியநிலையில், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் தி.சர்வானந்தன் யாழ்ப்பாணத்திலும், வடக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி கிளிநொச்சியிலும் குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகத்தினை அமைக்லாமென தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
மாங்குளம் வடமாகாணத்தின் மையப்புள்ளியில் அமைந்துள்ளதால், மாங்குளத்தில் வடமகாணத்திற்குரிய மாகாணத் திணைக்களங்கள் அமைக்கப்படவேண்டுமென மாகாணசபையில் ஏற்கனவே அனைவராலும் தீர்மானிக்கப்பட்டிருந்து.
எனவே அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வடமாகாணத்திற்குரிய சில மாகாணத் திணைக்களங்கள் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையிலே வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகமும் மாங்குளத்தில் அமைக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 2020.12.23ஆம் திகதி இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட காணிபயன்பாட்டுக் குழுக்கூட்டத்தில் குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு 02ஏக்கர் காணி ஒதுக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருவதாக அறியமுடிகின்றது.
குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடுசெய்யப்பட்டும் இதுவரை அங்கு அலுவலகம் அமைக்கப்படாமைக்கான காரணம் என்ன? தொடர்ந்தும் எதற்காக யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றீர்கள்? மாங்குளத்தில் குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளரை இதற்குரிய பதிலை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
இந்நிலையில் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன் இதன்போது பதிலளிக்கையில்,
வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் பல வருடங்களாக வாடகைக் கட்டடத்திலேயே இயங்கிவந்தது.
இந்நிலையில் அரச திணைக்களங்கள் எவையும் வாடகையில் இயங்கக்கூடாதெனச் சுற்றறிக்கையொன்று வந்திருந்தது.
அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் தொடர்ச்சியாக எமக்கு இடமொன்று தேவையென கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதற்கமைய வடக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனை இயங்கிவந்த அரச கட்டடத்தை எமக்குத் தருவதாகத் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர்.
அந்தவகையில் கடந்த 2024ஆம் ஆண்டு எம்மிடம் அந்தக்கட்டத்தைக் கையளித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அக்கட்டடத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றோம்.
வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை நிறுவுவதற்கென ஒரு காணியைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
மாங்குளத்திலுள்ள காணியானது மூலிகைத் தோட்டத்திற்காகவே எம்மால் ஆரம்பத்தில் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாங்குளத்தில் எம்மால் பெறப்பட்டுள்ள காணியிலும் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்தினை அமைப்பதற்குரிய வசதியிருக்கின்றது.
இந்நிலையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை நிறுவுவதற்கு யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிலும் எம்மால் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் எம்மிடமுள்ளன. வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கென்றே கடந்த 2020.12.23திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட காணி பயன்பாட்டுக்குழுக் கூட்டத்தில் தங்களுக்கு மாங்குளத்தில் 02ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தவிடயத்தில் தாங்கள் மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டாம். கூடியவிரைவில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் அமைப்பதற்கான உரிய முன்மொழிவுகளை வழங்குங்கள். மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் பெறுவதில் சிரமங்கள் இருப்பின் எம்மிடம் முறையீடுசெய்யுங்கள். அரசாங்கத்துடன் பேசி அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருகின்றோம் - என்றார்.
தமது கோரிக்கைக்கு அமைய 2026ஆம் ஆண்டு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனச் சொல்லப்படுவதாக இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானத்தனால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணியினால் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு மாகாண அலுவலகத்தினை கொண்டுவரும் விடயத்தில் தாம் மாத்திரம் முடிவெடுக்கமுடியாதெனவும், குறித்த அலுவலகத்திற்கு பணியாற்றுவதற்கு வருகைதரும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்கவேண்டுமெனவும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கீடுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,
மாங்குளத்தில் குறித்த மாகாணசுதேச மருத்துவதிணைக்களம் அமைப்பதற்கு ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவைச் செயற்படுத்துமாறும் வலியுறுத்தினார். அதேவேளை குறித்த அலுவலகத்திற்கு பணியாற்ற வருகைதரும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் கருத்தில்கொண்டுதான் குறித்த அலுவலகம் எங்கு அமைக்கப்படுமென முடிவெடுப்பதானால் மக்களின் நலன் தொடர்பில் கருத்திலெடுப்பதில்லையா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விக்கு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி பதிலளிக்கையில்,
நிச்சயமாக மக்களின் நிலைதொடர்பிலும் நிச்சயமாக கவனத்திலெடுக்கப்படவேண்டும். அதில் எவ்விதாமான மாற்றுக்கருத்துக்களுமில்லை. வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை மாங்குளத்தில் அமைக்கக்கூடாதென்ற மனநிலை எமக்கில்லை. ஆனாலும் கிளிநொச்சியில் குறித்த மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை அமைத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருத்தமாகஇருக்கும். ஓரளவிற்கேனும் குறித்த அலுவலகத்திற்கு உத்தியோகத்தர்களையும் கொண்டுவந்தாலே குறித்த மாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறானாகக் கொண்டுசெல்லமுடியும். அதற்காகவே கிளிநொச்சியில் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நிலைப்பாட்டிலிருக்கின்றோம்.
இதுதொடர்பாக வடமாகாண ஆளுநருடனும் பேசியிருக்கின்றோம். நிச்சயமாக அடுத்தவருடம் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்திற்குரிய அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இதுதொடர்பில் ஆளுநருடன் நாமும் கலந்துரையாடுவோம். இருப்பினும் வடமாகாணத்தின் மையமாக இடமாக மாங்குளம் இருப்பதால், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் நன்மை கருதியே மாங்குளத்தில் குறித்த அலுவலகத்தினை அமைப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாமெனவும், வன்னியைப் புறக்கணிக்கவேண்டாமெனவுந் தெரிவித்தார்.
குறித்த வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகத்தை ஐந்து மாவட்டங்களினதும் நன்மைகருதி மாங்குளத்தில் அமைப்பதென ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறிச் செயற்பட்டால் வீதிக்கு இறங்கிப் போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மன்னார் பிரஜைகள்குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பதைப்போல குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைக்கப்படுவதே சிறப்பாக இருக்குமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த விடயம்தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம். கட்டாயமாக அடுத்த ஆண்டில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்திற்கான புதியகட்டடமொன்றை அமைக்கவுள்ளோம்.
பெரும்பாலும் நாங்கள் அந்தக்கட்டடத்தினை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கமாட்டோம். மாகாணமென்ற ரீதியில் மாகாணத்தின் மையப்பகுதியில் அந்தக் கட்டடம் அமைக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம் - என்றார்.




No comments