Page Nav

HIDE

Breaking News:

latest

அமைச்சரவையில் மாற்றம் இல்லை விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டத்தை தொடரலாம் - அமைச்சரவைப் பேச்சாளர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச கல்வி அமைச்சு மற்றும் பரீட்ச...

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் தனது சத்தியாக்கிரக போராட்டத்தை தொடரலாம். அமைச்சரவையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் அடிப்படையற்ற கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. அரசாங்கம் அவை தொடர்பில் கவனத்தில் கொண்டு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. ஆனால் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினரின் கவலைகள் தொடர்பில் நிச்சயம் கரிசனை கொண்டுள்ளோம். சிறிய ஒரு சந்தேகத்துடன் கூட இதனை முன்கொண்டு செல்ல முடியாது.

எனவே தான் இதனை பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவது பொது மக்களுக்கு தெளிவூட்டுதலாகும். அதற்குரிய செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய சீர்திருத்தங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். தவறுகளுக்கு தொடர்பான அதிகாரிகள் குறித்து உரிய நேரத்தில் கல்வி அமைச்சினால் வெளிப்படுத்தப்படும்.

அச்சிடப்பட்ட நூல்களால் இலாபமா நஷ;டமா என்பதை தற்போது மதிப்பிட முடியாது. காரணம் முழு புத்தகத்திலும் பிரச்சினையில்லை. ஒரேயொரு பாடத்தொகுதியில் மாத்திரமே சிக்கல் ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் கல்வியை முற்றாக தனியார் மயப்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் கூட முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எம்மால் முன்வைக்கப்பட்டிருப்பது அவ்வாறான சீர்திருத்தங்கள் அல்ல.

இந்த சீர்திருத்தங்களுக்கு எவ்வித சர்வதேச நிதி உதவிகளும் பயன்படுத்தப்படவில்லை. முற்றுமுழுதாக அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலேயே இவை முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தால் விமல் வீரவன்சவுக்கு தனது சத்தியாக்கிரக போராட்டத்தை நிறுத்த வேண்டியேற்படாது. காரணம் அவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியே சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார்.

ஆனால் எந்தவொரு காரணத்துக்காகவும் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்தோ பிரதமர் பதவியிலிருந்தோ விலகப் போவதில்லை. எனவே அவர் தனது சத்தியாக்கிரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியேற்படும். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் , பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவியிலிருந்து நீக்கும் வரை விமல் வீரவன்ச தனது சத்தியாக்கிர போராட்டத்தை தொடர்வதில் எவ்வித சிக்கலும் இல்லை. அமைச்சரவையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை என்றார்.


No comments