மன்னாரில் டைனமைட் வெடிபொருளுடன் இரு மீனவர்களுக்கு விளக்கமறியல்!
மன்னார் நிருபர் | 19-02-2026
இலங்கையின் மன்னார் வளைகுடாப் பகுதி, உலகிலேயே பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். இங்கு சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், குறுகிய கால லாபத்திற்காகச் சில மீனவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் என்ன?
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் இன்று (19-02-2026) அதிகாலை வேளையில் ஓலைத்தொடுவாய் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு மீனவர்களைச் சோதனையிட்டபோது, அவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காகத் தமது உடமையில் 'டைனமைட்' வெடிபொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீர் விநியோகத் திட்டங்கள் தாமதம் தொடர்பில் பாராளுமன்றறில் சாணக்கியன்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று தொகுதி டைனமோட் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவு
மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, இரு சந்தேக நபர்களும் இன்று வியாழக்கிழமை மதியம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், சட்டவிரோத வெடிபொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக இரு மீனவர்களையும் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் வீரியம் மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்ய, அவற்றை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
டைனமோட் மீன்பிடி: கடலுக்கும் மனிதனுக்கும் ஏற்படும் ஆபத்து (விழிப்புணர்வு)
தமிழகம் மற்றும் ஈழத்து மீனவர்களின் வரலாற்றில் கடல் என்பது தெய்வமாக வணங்கப்படும் ஒன்று. ஆனால், டைனமோட் போன்ற வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது என்பது ஒரு தற்கொலைக்குச் சமமான செயலாகும்.
1. பவளப்பாறைகள் அழிவு: வெடிபொருட்கள் வெடிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் கடலடியில் உள்ள பவளப்பாறைகளைச் சிதைத்து விடுகின்றன. இந்தப் பவளப்பாறைகள் மீண்டும் வளர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இவை அழிந்தால் மீன்கள் முட்டையிடும் இடங்கள் இல்லாமல் போய்விடும்.
2. ஒட்டுமொத்த மீன் இன அழிவு: வெடிபொருட்களைப் பயன்படுத்தும் போது பெரிய மீன்கள் மட்டுமன்றி, முட்டைகள் மற்றும் குஞ்சு மீன்களும் முழுமையாக அழிந்து விடுகின்றன. இது எதிர்காலத்தில் மன்னார் கடல் பகுதியில் மீன் வளமே இல்லாத நிலையை உருவாக்கும்.
3. மனித உயிருக்கு ஆபத்து: தவறான கையாளுதலால் பல மீனவர்கள் தமது கைகளையும், கண்பார்வையையும் இழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இது ஒரு கொடிய குற்றமாகும்.
இலங்கை கடல் சட்டமும் தண்டனைகளும்: இலங்கையின் 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின்படி, வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது பாரிய குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான அபராதமும், சிறைத் தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மன்னார் போன்ற பகுதிகளில் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்காகக் கடற்படையினர் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக விழிப்புணர்வு நமது வியூகம்
மன்னார் கடற்பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். "தமிழ் வியூகம்" வாயிலாக நாம் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றிய தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு வழங்கி, நமது மண்ணையும் கடலையும் காக்க முன்வாருங்கள்.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம் tamilviyugam12@gmail.com-0774084745,

COMMENTS