மன்னார் கோரைக்குளம்-வரலாற்று பின்னணி-ஆக்கிரமிப்பு-அசமந்தப் போக்கு
1. வரலாற்றுப் பின்னணியும் 'கோரை' புல்லின் மகிமையும்
மன்னாரின் பூர்வீக வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது இந்த கோரை குளம். இக்குளம் வெறுமனே நீரைச் சேமிக்கும் இடமாக மட்டும் அன்றி, ஒரு காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதார மையமாகவும் விளங்கியது.
பெயர்க்காரணம்: இந்த குளத்திற்கான பெயர்க் காரணம் பல இருந்தாலும் ஒன்று ஆதிகால வரலாற்று யட்சர்களுடன் தொடர்புபட்டுள்ளது அத்துடன் இக்குளத்தில் செழித்து வளர்ந்த 'கோரை' எனும் புல் வகையும் இப்பெயர் வர முக்கிய காரணமானது.
பாரம்பரியக் கைத்தொழில்: முன்னைய காலங்களில் மன்னார் மக்கள் இக்குளத்தில் இருந்து பெறப்படும் கோரைப் புற்களைக் கொண்டு பாய், கூடைகள், பெட்டிகள், கயிறுகள், சுலகு மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களை மிக நுணுக்கமாகச் செய்து வந்தனர். இது ஒரு குடிசைத் தொழிலாகவே மன்னார் நகரில் செழித்து வளர்ந்து வெளிநாட்டு வியாபாரிகளுக்கும் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் விற்பனை செய்து சிறந்த வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்
யட்சர்களுடன் தொடர்பு: வரலாற்றின் படி, இக்குளம் ஆதி காலத்து யட்சர்களோடு தொடர்புடைய ஒரு இடமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகவும் இருந்திருப்பதை சங்ககால நூல்கள் சிலவற்றை படிக்கும் போது உணர முடியும்
மத அனுஷ்டானங்கள்:- ஆதி காலத்தில் சைவ மத அனுஷ்டானங்கள் செய்வதற்கும் இந்த கோராப்புல் பயன் பட்டதாக நம்பப்படுகிறது
2. ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கிய நீர்நிலை
மன்னார் நகரின் மிக முக்கியமான இந்த நீர்நிலை இன்று வேலிகளால் சுயநலத்தினால் சுருங்கி வருகின்றது.
வேலிகளால் முடக்கப்பட்ட குளம்: கடந்த பல வருடங்களாக குளத்தின் உட்பகுதிகள் சில தனிநபர்களால் அடாவடியாகப் பிடிக்கப்பட்டு, குளத்திற்குள்ளேயே வேலிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதை மக்கள் அவதானித்து கேள்வி எழுப்புகின்றனர்
முற்றுப்புள்ளி வைக்கப்படும் எம்பி-க்களின் ஓய்வூதியம் மார்ச் 17-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதம்
மனுக்களும் மௌனமும்: இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி அப்போதைய மன்னார் மாவட்டச் செயலாளரிடம் பொதுமக்கள் சார்பாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பே பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்ட போதிலும், இன்று வரை எந்த தீர்வுகளும் கிடைக்கவில்லை என்பது மக்களின் வேதனை
விவசாயம் செய்யப்பட்டது : சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத் திணைக்களத்தின்தலைமையில் இந்த பகுதியில் விவசாயம் செய்து அறுவடையும் செய்யப்பட்டது
3. அசுத்தமாகும் சுற்றுச்சூழல்: பறவைகளின் புகலிடம் கேள்விக்குறி
எழுத்தூர் சந்தி வீதியில் இருந்து தாராபுரம் வரை நீண்டிருக்கும் இந்தக் கோரை குளமானது, பருவகாலங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளை ஈர்க்கும் ஒரு மிகச்சிறந்த சரணாலயமாகத் திகழ்கிறது.
குப்பை மேடாக மாறும் அவலம்: இவ்வளவு சிறப்பு மிக்க இடம் இன்று கருவேல மரங்கள் அடர்ந்து, கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேடாக மாறி வருகின்றது.
சுற்றுலாத்துறைக்கு இழப்பு: முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்டால், இது மன்னாரின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக மாறியிருக்கும். வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மாலை நேரங்களில் வந்து செல்லும் ஒரு பொழுதுபோக்குத் தலமாக மாற்றும் வாய்ப்பு இருந்தும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
4. மக்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் சட்டச் சிக்கல்கள்
கோரை குளம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி பொதுமக்களுக்கு எந்தத் தெளிவும் இல்லை.
நீதிமன்ற வழக்குகள்: இக்குளத்தின் எல்லைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? அல்லது அரசியல் செல்வாக்கினால் இவை கிடப்பில் போடப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
சுகாதார சீர்கேடு: குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் நகரின் சுகாதாரத் துறைக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் நீர் தேங்கி நுளம்புப் பெருகும் இடமாக இது மாறிவருவது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விடயமாகும்.
மன்னார் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான கோரை குளம், வெறும் குளம் மட்டுமல்ல; அது மன்னார் மக்களின் கலாசார மற்றும் வரலாற்று அடையாளம். இந்த இடத்தை மீட்டு, அசுத்தங்களை அகற்றி, ஒரு அழகான பறவைகள் சரணாலயமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாற்றுவது மாவட்டச் செயலகம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலையாய கடமையாகும்.
"வரலாற்றுச் சின்னங்கள் அழிவது ஒரு இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்குச் சமம்."
எனவே, இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கோரை குளத்தை அதன் பழைய பொலிவுடன் மீட்டுத் தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மன்னார் மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.
@tamilviyugam


COMMENTS