மன்னார் திருக்கேதீச்சரத்தில் மகா சிவராத்திரி விழா வை முன்னிட்டு விஷேட சிரமதானம்
இலங்கையின் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு ஆலயப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளும், நிர்வாக ரீதியிலான முன்னேற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகிறது
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்,
1. நானாட்டான் பக்தர்களின் அர்ப்பணிப்புள்ள சிரமதானம்
சிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தூய்மையான சூழலில் வழிபாடு செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், இன்று (08-2-2026) காலை விசேட சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பங்கேற்பு: மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயப் பக்தர்கள் ஒன்றிணைந்து இந்தச் சேவையினைச் செய்தனர்.
பணிகள்: இன்று (8) காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தச் சிரமதானத்தின் போது, திருக்கேதீச்சர ஆலயத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றவுள்ள இடங்கள் துப்பரவு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டன. பக்தர்களின் இந்தத் தன்னார்வத் தொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
2. மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
மகா சிவராத்திரி விழாவை எவ்வித அசௌகரியங்களும் இன்றி சீராக நடத்துவது குறித்து ஆராயும் விசேட ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27-01-2026) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
3. போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யத் தீர்மானிக்கப்பட்டது:
வீதிப் பராமரிப்பு: வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் ஆலயத்தை நோக்கிச் செல்லும் வீதிகளைச் செப்பனிடவும், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆலய சிவத் தொண்டர்கள் தொண்டர்கள்
திருக்கேதீச்ச சிவராத்திரி விழாவில் பெருமளவிளான சிவத் தொண்டர்கள் சிவப் பணியாற்றுவார்கள்
போக்குவரத்துச் சேவை: இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் இணைந்து, நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து திருக்கேதீச்சரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
வாகனத் தரிப்பிடம்: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பக்தர்களின் வாகனங்களை நிறுத்தப் போதுமான இடவசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
4. பாலாவி தீர்த்தக்கரை நேர்த்திக்கடன்
திருக்கேதீச்சரத்தின் சிறப்பம்சமாக விளங்கும் பாலாவி தீர்த்தத்தில் நீராடுவது சிவராத்திரி தினத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
"ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாலாவியில் புனித தீர்த்தம் எடுத்து, தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி சிவபெருமானின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்." இந்த வருடம் தீர்த்தக்கரை பகுதியில் பக்தர்களின் பாதுகாப்புக்காக விசேட உயிர்காப்புப் பிரிவினரும், மேலதிக சுகாதார வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சிவராத்திரி என்பது வெறும் விழா மட்டுமல்ல அது ஆன்மீகத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகும். அரசாங்க அதிபரின் நேரடி மேற்பார்வையிலும், தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பிலும் இந்த ஆண்டு சிவராத்திரி விழா திருக்கேதீச்சரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
@tamilviyugam

COMMENTS