மன்னாரில் வட்டிக்காரர்களிடம் சிக்கிய பெண் கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்
மன்னார் நிருபர் | 18-02-2026
யுத்தத்தின் வடுக்களை சுமந்து கொண்டு, எஞ்சிய வாழ்க்கையை கௌரவமாக வாழ நினைத்த ஒரு பெண்ணின் வாழ்க்கை, கந்துவட்டி எனும் அரக்கனால் சிதைக்கப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வறுமையும், கடன் சுமையும் ஒரு மனிதனை எந்த எல்லைக்கு தள்ளும் என்பதற்கு இந்த முன்னாள் பெண்ணின் கதை ஒரு சாட்சியாக மாறியுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்
மன்னார் மூர் வீதி பகுதியில் வசிக்கும் இந்தப் பெண்மணி,இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தில் தனது ஒரு காலை முற்றாக இழந்தவர். உடல் ரீதியான ஊனத்தைப் பொருட்படுத்தாது, யாருடைய உதவியுமின்றி உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியுடன் வாழ்ந்து வந்த இவருக்கு, மூலதனத் தேவைக்காகத் தொடங்கிய ஒரு சிறு கடன் முயற்சி இன்று வாழ்நாள் துயரமாக மாறியுள்ளது.
கந்துவட்டி கும்பலின் சூழ்ச்சி வலை
பலதரப்பட்ட தேவைக்காக கடன் பெற்று வந்த இவருக்கு காலப்போக்கில் வட்டி என்ற போர்வையில் இவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளினர். வாங்கிய அசலை விட பல மடங்கு வட்டி உயர்ந்து கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் இவரது மொத்த உழைப்பும் வட்டி கட்டவே போதுமானதாக இருக்கவில்லை.
மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும்
இவருக்கு, கந்துவட்டி கும்பலிடமிருந்து தொடர் மிரட்டல்கள் வரத் தொடங்கின. "பணத்தைத் தராவிட்டால் கொ*******லை செய்து விடுவோம்" என்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. சமூக அவமானத்திற்கும், உயிருக்கு பயந்தும் வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு வட்டி கும்பலின் ஒரு பகுதியை அடைத்த போதிலும், அராஜகம் ஓயவில்லை. இன்றும் "இன்னும் வட்டி மீதமுள்ளது" என அக்கும்பல் அவரைத் துரத்துவது மனிதாபிமானமற்ற செயலின் உச்சமாகும்.
ஏன் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்? ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் அவசரத் தேவைக்காக கடன் வாங்குவது எளிதாகத் தெரிந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பாரதூரமானவை:
மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணம்: கடன் கொடுத்தவர்களின் தொடர் தொல்லைகள் மற்றும் அவமானங்கள் மனிதர்களை மனரீதியாக நிலைகுலையச் செய்கிறது.
உடல் நல பாதிப்பு: போதிய ஊட்டச்சத்து இன்றி உழைப்பதும், கவலையும் நோய்களுக்கு வழிவகுக்கும். இங்கு அந்தப் பெண் தனது உடல் உறுப்பையே இழந்துள்ளார்.
குடும்பச் சிதைவு: கடன் பிரச்சனை காரணமாக குடும்பங்களுக்குள் சண்டைகளும், பிரிவுகளும் ஏற்படுகின்றன.
சமூக அவமானம்: பொது இடங்களில் கடன் கொடுத்தவர்கள் ஏற்படுத்தும் அசிங்கமான விமர்சனங்கள் தனிமனித கௌரவத்தைப் பாதிக்கிறது.
கடன் சுமையில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? (விழிப்புணர்வு வழிகாட்டி)
கடன் என்பது ஒரு மாய வலை. அதில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்கள் மீளவும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
தேவைகளைச் சுருக்குதல்: ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, வருமானத்திற்குள் செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளை நாடுதல்: வீதி ஓரங்களில் இருக்கும் குழுக்கள் அல்லது கந்துவட்டிக்காரர்களிடம் செல்வதை விட, சட்டப்பூர்வமான வங்கிகளில் அல்லது நுண்கடன் நிறுவனங்களில் (விதிமுறைகளை ஆராய்ந்து) கடன் பெறுவது பாதுகாப்பானது.
சேமிப்புப் பழக்கம்: சிறு வயது முதலே சிறிய தொகையைச் சேமிக்கும் பழக்கம் அவசர காலங்களில் கடனைத் தவிர்க்க உதவும்.
சமூக அமைப்புகளின் உதவி: கிராம மட்டத்திலான கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் தொழில் வழிகாட்டல்களைப் பெறலாம்.
சட்ட ரீதியான அணுகுமுறை: கந்துவட்டிக்காரர்கள் மிரட்டினால் அஞ்சாமல் காவல்துறையின் உதவியை நாட வேண்டும். அச்சுறுத்தல்களுக்கு பயந்து உயிருக்கு ஆபத்தான முடிவுகளை எடுக்கக் கூடாது.
அதிகாரிகளின் மௌனம் எப்போது களையும்?
மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்டவிரோத வட்டித் தொழில் பகிரங்கமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இப்பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் இவர்களிடம் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். "எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?" என அந்தத் தாய் எழுப்பும் கேள்வி ஒட்டுமொத்த சமூக மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, இந்தச் சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்குத் தேவையான மருத்துவ மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
உதவிக் கரம் நீட்ட விரும்புவோர்:- பாதிக்கப்பட்ட இந்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.
தொலைபேசி இலக்கம்:- +94 77 763 2388
நன்றி தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம், tamilviyugam12@gmail.com

COMMENTS