தெற்காசிய விருது வென்ற மன்னார் சாந்திபுரம் ரீட்டா வசந்தி தன்னம்பிக்கை பயணம்
தடைகளை உடைத்த தையல் ஆயுதம்
சிறுவயதில் தனது உடல் குறைபாட்டைக் கண்டு சமூகம் கிண்டல் செய்தபோதும், ஒதுக்கி வைத்தபோதும் மனம் தளராமல், அந்த வலிகளையே தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றியவர் ரீட்டா. முறையான தையல் பயிற்சியைப் பெறாவிட்டாலும், இன்று பல நவீன டிசைன்களை சுயமாக உருவாக்கித் தைக்கும் அளவிற்கு ஒரு சிறந்த ஆளுமையாக உயர்ந்துள்ளார். தனது கணவர் இல்லாத நிலையிலும், நான்கு பிள்ளைகளையும் இந்தத் தையல் தொழிலின் மூலமே படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம்
இவரது திறமை வெறும் தையலோடு நின்றுவிடவில்லை. கிராம மட்டம் முதல் தேசிய மட்டம் வரை தனது ஆளுமையை நிரூபித்த ரீட்டா அக்கா, "தெற்காசியாவின் சிறந்த மீனவப் பெண்மணி" என்ற சர்வதேச விருதினை இலங்கையிலிருந்து வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமைக்குரியவர். இது மன்னார் மாவட்டத்திற்கே கிடைத்த ஒரு மிகப்பெரிய கௌரவமாகும். தற்போது பல்வேறு மகளிர் அமைப்புகளின் தலைவியாகப் பொறுப்பு வகிக்கும் அவர், மீனவ மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இளம் பெண்களுக்கு விடுக்கும் அழைப்பு
"பட்டதாரி ஆகிவிட்டு வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல், பெண்கள் ஏதாவதொரு சுயதொழிலைக் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்" என்பது இவருடைய பிரதான கோரிக்கையாக இருக்கிறது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறும்போதுதான் சமூகம் அவளை மதிக்கும் என்பதை இவர் ஆணித்தரமாக நம்புகிறார்.
நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு...
மன்னார் மாவட்டத்தில் ரீட்டா அக்காவைப் போலத் திறமை மிக்க பல பெண்கள் அங்கீகாரம் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றனர். ரீட்டா அக்கா இன்று ஒரு வெற்றியாளராகத் தெரிந்தாலும், அவர் தைக்கும் ஆடைகளைச் சந்தைப்படுத்துவதில் (Marketing) பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக:
உற்பத்தி செய்யும் ஆடைகளை விற்பனை செய்வதற்கான முறையான சந்தை வாய்ப்பு இல்லாமை.
போக்குவரத்து வசதிகள் குறைபாட்டினால் பொருட்களை வெளியூர்களுக்குக் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள்.
இப்படியான சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய அரசு முறையான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.



COMMENTS