இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அவசரத் தேவை
இயற்கை பேரிடர்கள் எப்போது தாக்கும் என்று எவராலும் துல்லியமாகக் கூற முடியாது. ஒரு தீவு நாடாக இருக்கும் இலங்கை, ஒவ்வொரு வருட இறுதியிலும் வங்கக் கடலில் உருவாகும் தாழமுக்கம், கடும் மழை மற்றும் புயல் அச்சுறுத்தல்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய காலங்களில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க 'புயல் பாதுகாப்பு மண்டபங்கள்' (Cyclone Shelters) மிக அவசியமான ஒன்றாகும்.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்
1. புயல் பாதுகாப்பு மண்டபம் என்றால் என்ன?
இவை சாதாரணக் கட்டிடங்கள் அல்ல; புயல், சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களைத் தாங்கும் வகையில் விசேட பொறியியல் நுட்பத்துடன் கட்டப்படுபவை.
கட்டமைப்பு: நிலமட்டத்திலிருந்து உயரமாக, வலுவான தூண்களின் மேல் இவை அமைக்கப்படும். வேகமாக வரும் காற்று கட்டிடத்தைத் தாக்காமல் ஊடுருவிச் செல்லுமாறு திறந்த வெளி ஜன்னல்கள் (Open windows) இதில் வடிவமைக்கப்படும்.
வசதிகள்: பேரிடர் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்குவதற்கும், முதலுதவி சிகிச்சை பெறுவதற்கும், சமைப்பதற்கும் ஏற்ற அடிப்படை வசதிகளை இது கொண்டிருக்கும்.
2. தற்போதைய நிலையும் ஆபத்தும்
தற்போது அனர்த்த காலங்களில் மக்கள் பாடசாலைகள், ஆலயங்கள் அல்லது பொது நோக்கு மண்டபங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பற்ற நிலை: இந்தக் கட்டிடங்கள் பெரும்பாலும் சாதாரண நிலமட்டத்தில் இருப்பதால், கடும் வெள்ளம் வரும்போது இவையும் நீரில் மூழ்கும் அல்லது இடிந்து விழும் அபாயம் கொண்டவை.
வானிலை எச்சரிக்கை: 2004 சுனாமிக்குப் பிறகு பெரிய உயிர்ச்சேதங்கள் இல்லாவிட்டாலும், வானிலை ஆய்வு மையங்கள் கணிக்கும் புயல்கள் திசை மாறுவதாலேயே நாம் தப்பித்துக் கொள்கிறோம். ஒருவேளை கணித்தபடி ஒரு பாரிய புயல் இலங்கையை நேரடியாகத் தாக்கினால், போதிய பாதுகாப்பு மண்டபங்கள் இல்லாதது மீள முடியாத பெரும் துயரைத் தரும்.
3. மன்னார் மற்றும் வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் தேவை
கடல் மட்டத்திலிருந்து தாழ்வாக இருக்கும் மன்னார் மாவட்டம் போன்ற பகுதிகளுக்கு இது மிகவும் அத்தியாவசியமானது.
மன்னாரில் ஒரு வாரம் மழை பெய்தாலே வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி விடுகிறது.
இத்தகைய தாழ்நிலப் பிரதேசங்களில் கடற்கரையை ஒட்டிய கிராமங்கள் தோறும் உயரமான புயல் பாதுகாப்பு மண்டபங்களை அமைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
4. மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்
இந்த மண்டபங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளைப் பாதுகாக்கவும் பயன்படும். அண்மையில் மட்டக்களப்பில் வெள்ளம் வந்தபோது காட்டு யானைகள் கழிவு மீள்சுழற்சி கட்டிடங்களின் மீது ஏறி நின்றதை ஒரு பாடமாகக்கொள்ள வேண்டும். மேட்டு நிலங்களில் அமைக்கப்படும் இக்கட்டிடங்கள் பேரிடர் இல்லாத காலங்களில் நெல் சேமிப்பதற்கும், உலர்த்துவதற்கும் பயன்படுத்தப்படலாம்.
முருங்கன் ஆதார வைத்தியசாலையினரின் தொடர் மனிதாபிமானப் பணி
5. யார் முன்வர வேண்டும்?
அரசாங்கம் மட்டுமல்லாது, தனவந்தர்கள், வியாபாரிகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஒன்றிணைந்து தத்தமது கிராமங்களில் இவ்வாறான பாதுகாப்பு மையங்களை அமைக்க முன்வர வேண்டும். மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் இது குறித்துப் பேசி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
காலநிலை மாற்றம் எப்போது வேண்டுமானாலும் கோர முகத்தைக் காட்டலாம். புயல் வந்து உயிர்களைக் காவு வாங்கும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கையாகப் பாதுகாப்பு மண்டபங்களை அமைப்போம். பேரிடரை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறுவோம்
நன்றி ஜெகன் ஊடகவியலாளர்
@tamilviyugam


COMMENTS