இலங்கையில் இனப்பிரச்சனை தீராமல் தொடர்வதற்கான காரணம் என்ன?
இலங்கையின் பல தசாப்த கால இனப்பிரச்சினைக்கு இன்னும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படாதது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் தடையாக உள்ளது. "சிங்களத் தலைவர்கள் தமிழர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்தால் மாத்திரமே இந்த நாடு சுபீட்சமடையும்" என்பது அரசியல் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும். பயத்துடனும் சந்தேகத்துடனும் தமிழர்களை அணுகுவது எந்தவொரு நல்லெண்ண நடவடிக்கையையும் வெற்றியடையச் செய்யாது.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்
1. வரலாற்றுச் சான்றுகள் சொல்லும் பாடம்
தமிழர்கள் எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்பதற்கு வரலாறு பல சான்றுகளைத் தந்துள்ளத:
புனிதப் பல் சின்னம்: பண்டைய காலத்தில் சிங்கள மன்னர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல்கள் இருந்தபோதும், புத்தரின் புனிதப் பல் சின்னத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு 'தமிழ் வேளைக்காரப் படைகளிடமே' ஒப்படைக்கப்பட்டிருந்தது. இது தமிழர்களின் நேர்மைக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவம்.
கண்டி இராச்சியப் பாதுகாப்பு: ஆங்கிலேயப் படைகள் இலங்கையைக் கைப்பற்ற முயன்றபோது, கண்டி மன்னனுக்கு ஆதரவாக வன்னிப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் திணறடிக்கப்பட்டனர். எதிர்ப்புகள் இருந்தாலும் பொது எதிரி என்று வரும்போது தமிழர்கள் இந்தத் தேசத்திற்காக நின்றிருக்கிறார்கள்.
2. தமிழர்களின் விட்டுக்கொடுப்பும் அமைதி வேட்கையும்
தமிழர்கள் தனித் தமிழீழக் கோரிக்கையிலிருந்து விலகி, இன்று மாகாண சபை அதிகாரங்கள் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கி இறங்கி வந்திருப்பது தோல்வியினால் அல்ல; மாறாக நாட்டின் அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் மீதான அக்கறையினாலேயே ஆகும்.
மட்டக்களப்பு ஏராவூர் பகுதி இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
பொருளாதாரப் பலம்: தமிழர்கள் எக்காலத்திலும் தற்சார்பு பொருளாதாரத்தைக் கொண்டவர்கள். போர்ச் சூழலிலும் கடல் கடந்து சென்று உழைத்து, இன்று உலகளாவிய ரீதியில் ஒரு பலமான புலம்பெயர் சமூகமாக வளர்ந்துள்ளனர்.
முதலீட்டு வாய்ப்பு: இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட்டால், சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்காமல், புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களைக் கொண்டே இலங்கையை ஆசியாவின் ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாற்ற முடியும்.
3. வல்லரசுகளின் ஆதிக்கமும் இலங்கைத் தேசமும்
இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் இலங்கையின் நலனை விடத் தத்தமது பிராந்திய நலன்களையே முதன்மையாகக் கருதுகின்றன.
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பது போல, இலங்கைக்குள் இனப்பகை நீடிப்பது வல்லரசுகளுக்குத் தங்களது அரசியலை முன்னெடுக்கவே வழிவகுக்கும்.
தூரத்துத் தண்ணீர் தாகம் தீர்க்காது என்பதைச் சிங்களத் தலைவர்கள் உணர வேண்டும். இலங்கைத் தீவின் உண்மையான பாதுகாப்பு அரண் என்பது வெளியார் அல்ல; அது ஒன்றிணைந்த தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பலமே ஆகும்.
4. தீர்வுக்கான வழிமுறை என்ன?
பழமைவாதச் சிந்தனைகளைத் துறந்து, ஒரு தேசிய இனமாகத் தமிழர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் நில உரிமைகளை அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும்.
நல்லிணக்கம்: தமிழர்கள் நீட்டியுள்ள அமைதிக் கரத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டியது சிங்களத் தலைவர்களின் கடமையாகும்.
அரசியல் அமைப்பு மாற்றங்கள்: ஒரு இனத்திற்கு மட்டும் சார்பான சட்டங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஒருபோதும் உதவாது. சகல மக்களும் சமமாக மதிக்கப்படும் சூழலே நிலையான அபிவிருத்தியைத் தரும்.
இலங்கை என்ற நாடு நவீன மாற்றங்களை நோக்கி நகர வேண்டுமானால், முதலில் அதன் இதயத்தில் உள்ள இனப்பகை எனும் ரணத்தை ஆற்ற வேண்டும். சிங்களத் தலைவர்கள் தமிழர்கள் மீது வைக்கும் ஒரு துளி நம்பிக்கை, இந்த நாட்டை உலக அரங்கில் தலைநிமிரச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
நன்றி ஜெகன் ஊடகவியலாளர்,
@tamilviyugam
.jpg)
COMMENTS