இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக பொருளாதார விருத்தியில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து உத்தியோகபூர்வ ஆய்வு ஒன்றை நடத்தி அதை வெளியீடாக க...
இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக பொருளாதார விருத்தியில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து உத்தியோகபூர்வ ஆய்வு ஒன்றை நடத்தி அதை வெளியீடாக கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி டி. வி. எஸ். டோல்கேட்டில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் 10.11.2025திங்கள்கிழமை காலை தமிழக முதல்வர்
மு. க. ஸ்டாலின் அவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி எம்பியுமான ரவூப் ஹக்கீம், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்தார்கள்.
பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கை குறித்து பேசினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லாம் கோரிக்கை விஷயமான அனைத்து பரிசீலனை செய்வதாக கூறினார்.
ரவூப் ஹக்கீம் அவர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை குறித்து சந்திப்பின் பின்னர் கூறியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலையில் திருச்சியில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பின்போது, இலங்கை - தமிழ் அகதிகளுக்காக விஷேட திட்டத்தை, கடந்த வரவு செலவுத் திட்டத்தின்போது திட்டத்தில் அறிவித்தமைக்காக முதலமைச்சர் அவர்களுக்கு இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தோம்.
இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் இன்னும் தீர்க்கப் படாமல் இருக்கும் முக்கிய அம்சமாக தமிழ் நாட்டு மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தகைசால் தமிழர் எனும் விருது வழங்கி கண்ணியப்படுத்தப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தபோது, இலங்கை பிரதமரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து உரையாடினர்.
இந்த மீனவர் பிரச்சனைக்கு, இருதரப்பினரும் இணைந்த கூட்டுறவு அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதை இரு தரப்பு மீனவர்களும் ஒற்றுமையாகச் செயல்படுத்துவதற்கான திட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என அதன்போது இலங்கை பிரதமருக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இலங்கை வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசித்து இதுகுறித்து சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான பரிசீலனைகள் முன்னெடுக்கப்படும் என்று ஒரு நம்பிக்கையை அதன்போது பிரதமர் வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், இலங்கை பாராளுமன்றத்தில் நாங்களும் இந்த ஆலோசனை குறித்த முன்னேற்பாடுகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேட்கவிருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.
அது குறித்து சாதகமாக பரிசீலிக்க முடியுமாக இருந்தால், அதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் நாங்கள் முன்வைக்கும் இந்த கோரிக்கை ஆசீர்வாதமாக அமையும் என்று நான் முதலமைச்சரவர்களிடம் சொல்லிவைத்தேன்.
அதே நேரத்தில், இலங்கையில் வாழ்கிற முஸ்லிம்களுக்கும் - தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையில் நீண்ட காலமாக ஆன்மிகம், மொழி ரீதியான தொடர் பாடல்கள் இருந்து வருவது மட்டுமல்ல; இலங்கை முஸ்லிம்களின் ஆன்மிக, பொருளாதார விருத்தியில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பும் அதிகமாக இருந்திருக்கிறது.
இது தொடர்பாக உத்தியோகப்பூர்வ ஆய்வு ஒன்றை நடத்தி, அதை வெளியீடாகக் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: அப்படிச் செய்தால் அதற்கு இலங்கை தரப்பில் இருந்து நாங்களும் ஒத்துழைக்க முடியும் என்றும் முதலமைச்சர் அவர்களிடம் நான் ஆலோசனை கூறி இருக்கிறேன்.
அதுபோல, மலையகத்தில் வாழ்கிற இந்திய வம்சாவழி தமிழர்கள் இந்துக்கள் - குறிப்பாக அவர்களது கோயில் கட்டுமானப் பணிகளில் இந்தியா - தமிழ்நாட்டில் உள்ள சிற்பக்கலை நிபுணர்களை அனுப்பி, அந்தக் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு ஒத்தாசை வழங்கிட தமிழ்நாடு அரசு உதவி வழங்க முடியுமாக இருந்தால், அது மிகவும் பெருமதியானதாக இருக்கும் என்றும் நான் முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கையை முன் வைத்தேன்.
மேற்படி கோரிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். வெகுவிரைவில் அதற்கு ஆவணம் செய்வார் என்று எதிர்பார்ப்பு எங்களுக்கு நன்றாகவே இருக்கிறது.
செப். 19-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நாகூர் இ.எம். ஹனீபா நூற்றாண்டு விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு தமிழக அரசின் உயர் விருதான தகைசால் தமிழர் விருது பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் புதுக் கோட்டை எம்.எம்.அப்துல் லாஹ் பங்கேற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments