சக்கர நாற்றகாலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் மாற்றாற்றல் கொண்ட இளைஞன்.
மன்னார்: இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை முன்னிலைப்படுத்தியும் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதுமான விழிப்புணர்வுப் பயணத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளார்.
யார் இந்த சாதனை இளைஞர்?
வவுனியா, சூடுவந்தகுளம் பகுதியைச் சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவரே இந்தச் சவாலான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் விளங்குகிறார்.
தனது பயணத் திட்டம் குறித்து இன்று திங்கட்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனைச் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
சமூகத்தை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கு மன்னார் நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது
பயணத்தின் முக்கிய நோக்கங்கள்:
நாளை செவ்வாய்க்கிழமை (20) மன்னாரில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பயணம் சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட கடற்கரையோரப் பகுதிகள் ஊடாக அமையவுள்ளது. இந்தப் பயணத்தின் பின்னணியில் மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளன:
சர்வதேச நாடுகளுக்கு நன்றி: இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கும், புலம்பெயர் உறவுகளுக்கும் நாட்டு மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்தல்.
சமூக ஒற்றுமை: அனர்த்தங்களின் போது எவ்வித இன, மத வேறுபாடுகளுமின்றி ஒன்றிணைந்த இலங்கை மக்களின் ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் உலகிற்குப் பறைசாற்றுதல்.
வேலைவாய்ப்பு கோரிக்கை: பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி முடங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தமான அரச வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
அரசாங்க அதிபரின் வாழ்த்து
முகமது அலியின் இந்தப் பாராட்டத்தக்க முயற்சியைக் கேட்டறிந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கினார். சக்கர நாற்காலியில் அமர்ந்து 1500 கி.மீ தூரத்தைக் கடக்கவுள்ள இந்த இளைஞருக்குப் பொதுமக்கள் அனைவரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@tamilviyugam
.jpg)
COMMENTS