மன்னார் நகர சபை தலைவருடன் முரண்பாடு நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
மன்னாரில் பரபரப்பு: வீதி விவகாரத்தில் நகரசபை தலைவருக்கும் நபருக்கும் இடையில் கைகலப்பு - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
தமிழ் வியூகம் செய்தியாளர்
30/01/2026
மன்னார்: மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி புனரமைப்புப் பணியின் போது, நகரசபை தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி: என்ன நடந்தது?
மன்னார் நகரசபைக்குச் சொந்தமான பாத்திமா புரம் பகுதியில் இன்று (30) கிரவல் பரப்பப்பட்டு வீதி அமைக்கும் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் உள்ள தனது பகுதி வீதியையும் அமைத்துத் தருமாறு நகரசபை தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த நபர் ஏற்கனவே பலமுறை இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், இன்று பணியில் இருந்த தலைவரிடம் நேரடியாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வாய்த்தர்க்கம் மற்றும் தாக்குதல்
"எங்கள் பகுதி வீதியை அமைக்காமல், தனிப்பட்ட ஒருவருக்காக இந்த வீதியை அமைப்பது சரியா?" என அந்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தலைமன்னார் தீடைப் பகுதிகள் சுற்றுலாவிகளுக்காக திறந்து விடப்படுமா?
பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி:
நகரசபை தலைவர் தன்னை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
தான் வெளியேற மறுத்தபோது, தலைவர் தன்னைத் தள்ளிவிட்டுத் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக்கொண்டதுடன், ஒருவரை ஒருவர் கற்களால் எறிந்து தாக்கியதாகவும் தெரியவருகிறது.
பெண் உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு
இந்த மோதலின் போது, அங்கிருந்த நகரசபை பெண் உறுப்பினர் ஒருவர் மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து குறித்த பெண் உறுப்பினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காயமடைந்த நபர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)
COMMENTS