Page Nav

HIDE

Breaking News:

latest

தமிழ் மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் நேரடியாக எடுத்துரைப்பு

தமிழ்வியூகம்  யாழ்ப்பாணம் செய்தியாளர், 22/8/2026, வடக்கு–கிழக்கு பகுதிகளில் பூர்வீகக் காணிகளை இழந்து போராடி வரும் மக்களின் பிரச்சினைகள் குறி...

தமிழ்வியூகம் 

யாழ்ப்பாணம் செய்தியாளர்,

22/8/2026,

வடக்கு–கிழக்கு பகுதிகளில் பூர்வீகக் காணிகளை இழந்து போராடி வரும் மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமரைச் சந்தித்த பின்னரே அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்பு மற்றும் கோரிக்கைகள்

யாழ்ப்பாணம் கச்சேரியில் சனிக்கிழமை (22-08-2026) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மாற்று வலுவுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு நிறைவடைந்த பின்னர், வடக்கு-கிழக்கு காணி உரிமைப் போராட்ட பிரதிநிதிகள் பிரதமரை நேரடியாகச் சந்தித்தனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் காணி உரிமைக்காக போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் காணி அபகரிப்புகள் குறித்த ஆழ்ந்த கவலைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

நீண்டகாலப் போராட்டமும் எதிர்பார்ப்பும்

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியில் காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்காமல் மக்கள் தொடர்ச்சியாக கால தாமதத்திற்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே இன்று ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்.

புதிய அரசாங்கத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்தபோதிலும், ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலைமை மிகுந்த கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, மக்களின் நீண்டகாலப் போராட்டத்தைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு உடனடியாக நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மகஜர் கையளிப்பும் பிரதமரின் உறுதியும்

காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலப் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று இதன்போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரைப் பெற்றுக்கொண்ட பிரதமர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் என ஜாட்சன் பிகிராடோ குறிப்பிட்டார்.

வடக்கு–கிழக்கில் காணி உரிமைக்காக போராடும் மக்களின் குரலைத் தொடர்ந்து உரிய தரப்புகளிடம் எடுத்துச் செல்வதுடன், அவர்களுக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வு கிடைக்கும் வரை அவர்களின் நியாயமான போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

@tamilviyugam

No comments