TAMILVIYUGAM.COM,EDITORIAL, 1/9/2026, பலாங்கொடை / திருகோணமலை: பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா...
TAMILVIYUGAM.COM,EDITORIAL, 1/9/2026,
பலாங்கொடை / திருகோணமலை: பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய மூன்று பாடசாலை மாணவிகள் viyugam கடந்த (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் திடீரென காணாமல் போயிருந்தனர். இது குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பொலிஸாரின் தீவிர விசாரணைகளுக்கு மத்தியில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்தது தெரியவந்துள்ளது. அங்கிருந்த பேருந்து தரிப்பிடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.
இலட்சக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்குகிறார்கள் அரசின் நிலைப்பாடு என்ன?
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைக் கடந்து இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் பயணித்ததாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் உறவினர்கள் அங்கு சென்று அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெற்றோரின் மனவேதனையும் சமூகப் பொறுப்பும்
ஒரு பெண் குழந்தை வீட்டிற்கு வர தாமதமானாலே பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனநிலை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகிறது. "எங்கே தேடுவது? யாிடம் சொல்வது?" என்று அறியாது, தூக்கமும் உணவுமின்றி அவர்கள் படும் அவஸ்தை அளவிட முடியாதது.
இத்தகைய சூழலில், மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் மாயமாகியிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது:
இதன் பின்னணியில் ஏதேனும் திட்டமிட்ட சதி, தூண்டுதல் அல்லது தவறான வழிகாட்டுதல்கள் இருக்கின்றனவா?
வேறு ஏதேனும் முக்கிய நபர்களுக்கு இதில் தொடர்புள்ளதா?
என்பது குறித்து பொலிஸார் ஆழமாக விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தொடரும் "மாயமாகி மீட்கப்படும்" சம்பவங்கள்: சட்ட நடவடிக்கையின் அவசியம்!
சமீபகாலமாக இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போவதும், பின்னர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தேடப்பட்டு சில மணி நேரங்களிலேயே "அங்கே நின்றார், இங்கே நின்றார்" என மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளர்கள் இத்தகைய செய்திகளைக் காணும்போது, தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி பதற்றத்துடன் பகிர்கிறார்கள் (Share). ஆனால், சிறுபிள்ளைத்தனமாகவோ அல்லது வீட்டின் பொறுப்புகளை உணராமலோ வீட்டை விட்டு வெளியேறி, சமுதாயத்தில் தேவையற்ற பயத்தையும் அச்சத்தையும் உருவாக்குபவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
முக்கிய பரிந்துரைகள்:
சட்டரீதியான விசாரணை: பொலிஸார் வெறுமனே மாணவிகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பதோடு நிறுத்தாமல், இதற்கான மூலக்காரணத்தைக் கண்டறிந்து கடுமையான சட்ட எச்சரிக்கையோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்க வேண்டும்.
பெற்றோரின் கண்காணிப்பு: வளர் இளம் பருவத்து (Teenage) பிள்ளைகளின் நடத்தை, நண்பர்கள் வட்டம் மற்றும் மனநிலையை பெற்றோர் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.
பாடசாலை ஆலோசகர்களின் பங்கு: மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தவறான ஈர்ப்புகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் குறித்து பாடசாலைகளில் உரிய மனநல ஆலோசனைகள் (Counselling) வழங்கப்பட வேண்டும்.
சமூக அமைதியைக் குலைக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பெற்றோரின் கண்ணீருக்கு நியாயம் கிடைக்கவும் பொலிஸார் நேர்மையான, தீவிர விசாரணையை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


COMMENTS