Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் கட்டுக்கரைக்குளம் தொல்லியல் அகழ்வாய்வு சொல்லும் செய்தி என்ன?பேராசிரியர் ப.புஸ்பரெட்ணம்

TAMILVIYUGAM.COM,20/9/2026 இலங்கையில்லேயே மிகவும் பழமையான வரலாற்றுத் தடயங்களை கொண்டது மன்னார் மாவட்டம்  அதில் பலருக்கம் தெரிந்தது மாந்தை தி...

TAMILVIYUGAM.COM,20/9/2026

இலங்கையில்லேயே மிகவும் பழமையான வரலாற்றுத் தடயங்களை கொண்டது மன்னார் மாவட்டம்  அதில் பலருக்கம் தெரிந்தது மாந்தை திருக்கேதீஸ்வரம் மாந்தை துறைமுகம் போன்றவைதான் இது வரை வெளி உலகத்திற்கு தெரியாமல் புதைந்து கிடக்கும் வரலாற்று மர்மம்  இந்த கட்டுக்கரை குளமும் அதனை அண்டிய பிரதேசங்களும்  இந்த கட்டுக்கரை குளப்பகுதியை   தொல்லியல் துறை பேராசிரியர் ப.புஸ்பரெட்ணம் அவர்களின் குழுவினர்களோடு கடந்த 2016ம் ஆண்டு ஆய்வு செய்து  பல அரிய தொல்லியல் சான்றுகளை எடுத்து  இப்பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாகவும் உறுதிப்படத்தியுள்ளார் 

இரணைமடுப் பகுதியை ஆய்வு செய்த  தொல்லியல்துறை பேராசிரியர் செரான் தெரணியகல  அப்பகுதியில் 12,500 ஆண்டுகளுக்கு முந்திய மனித குடியேற்றங்கள் இருந்ததாக கூறுகிறார் ஆனால் கட்டுக்கரைப் பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக பேராசிரியர் புஸ்ட்பரெட்ணம் கூறுகிறார்.  பெருங்கற்காலம் என்பது 20 தொடக்கம் முப்பது ஆயிரம் அண்டுகளுக்கு முற்பட்டது என்னும் தகவல்கள் உள்ளது இதிலிருந்து  மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பிரதேசங்களின் வரலாற்று தொண்மையினை அறிந்து கொள்ளலாம்


அது மட்டுமல்ல இப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து இப்பகுதி மேம்பட்ட பெரும் வியாபார நகர நாகரீக கலாச்சாரங்களை கொண்ட  மக்கள் வாழ்ந்ததாகவும்  இந்த அகழ்வாராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது  முழுவதும் வாசியுங்கள் 

தொல்லியல் மெலாய்வு ஆய்வுக்கட்டுரை பரமு.புஸ்பரெட்ணம்

பல்லினப் பண்பாடு கொண்ட இலங்கை வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்ட இனம் அல்லது குறிப்பிட்ட ஓர் மொழி பேசிய மக்கள் மட்டும் பண்டைய காலத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்ற கருத்து அண்மைய காலத்தில் தொல்லியலாளர்கள் மத்தியில் நிலவி வருவதைக் காணமுடிகிறது. அதற்குக் காலத்திற்குக் காலம்

பிற நாடுகளில் இருந்து பரவிய பண்பாடுகளும் புலம்பெயர்ந்து வந்தமக்களும் இலங்கையின் பல பாகங்களிலும் ஒன்றுபட்டு வாழ்ந்ததும் வளர்ந்ததும் என்று கூறப்படுகிறது.

ஆனால் வட இலங்கையின் பெருநிலப் பகுதி 13ம் நூற்றாண்டில் வன்னி என்ற பெயர் வருவதற்கு முன்னர் இலங்கையின் 2000 ஆண்டுகால வரலாற்றாய்வில் செல்வாக்கு செலுத்தி வரும் பாளி மொழி இலக்கியங்கள்  இப்பகுதியை நாகநாடு உத்ததேசம் (வடபகுதி) என்ற பெயர்களால் தனித்து வரலாற்றை காணமுடிகிறது.

மன்னார் பேசாலையில் சோகம் பற்றைக்காட்டில் 

இலங்கையில் வரலாற்றுப் பழமைவாய்ந்த மன்னார் மாவட்டத்திலிருந்து வடகிழக்கே ஏறத்தாழ 26 கி.மீ தொலைவில் வட்டக்கண்டல் பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. குளத்தின் பெயர் அக்காலத்தில் ஜோதா வேவ எனவும் தமிழில் கட்டுக்கரைகுளம் எனவும் அழைக்கப்படுகிறது. 

ஆயினும் இக்குளத்தையும் அதனைச் சுற்றி அமைந்த சில கிராமங்களும் பாலைப் பெருமாள்கட்டு என்றே அழைக்கப்படுகிறது. பண்டையகாலத்தில் மாதோட்டத்தையும் அனுராதபுரத்தையும் ஆற்று வழிப்பாதையாக காணப்பட்ட அருவியாற்றின் இருமருங்கிலும் புராதன குடியிருப்புகள் இருந்துள்ளதை இவ்விடங்களின் மேல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

அவற்றுள் அருவியாற்றுடன் இணைந்துள்ள கட்டுக்கரை பிரதேசம்வட இலங்கையில் முதன்மைக் குடியிருப்பாகவும் இலங்கையின் தொடக்ககால நகரமயமாக்களுக்கு உட்பட்ட இடங்களில் அமைந்திருக்கலாம் என்பதை அப்பிரதேசத்தில் கடந்த ஆறுமாத காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்விலும் தொல்லியல் தொல்லியல் அகழ்வாய்விலும் கிடைத்த பெறுமதியான ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன.

முன்னொரு காலத்தில் செரிவான குடியிருப்புகளைக் கொண்டிருந்த கட்டுக்கரை குளத்தின் வட எல்லைப் பகுதி பிரதேசம் தற்போது அடர்ந்த காடுகளாகவும் கொடிய விலங்குகள் வாழும் இடமாகவும் காணப்படுகிறது. ஆயினும் இப்பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த தொல்லியல் மேலாய்வில் இருந்து ஏறத்தாழ இரண்டு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு காலகட்டத்துக்குரிய பலதரப்பட்ட சான்றாதாரங்களை எமது குழவினர் இலகுவில் கண்டுபிடித்தமைக்கு காலத்துக்குக் காலம் கட்டுக்கரை குளத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களே சாதகமாகஇருந்துள்ளன. 

இன்று வட இலங்கையில் மிகப் பெரிய குளங்களில் ஒன்றாக கருதப்படும் கட்டுக்கரை குளத்தின் ஆரம்பத் தோற்றம் இற்றைக்கு2000ம் ஆண்டுகளுக்கு முன்னர் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் காணப்படுகிறது.

தென்னிந்தியா அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் இலங்கையிலும் நாடோடிகளாக வாழ்ந்துள்ள மக்கள் காலப்போக்கில் நிலையான ஓரிடத்தில் குடியேறிய போது தமது பொருளாதாரத்திற்காக சிறிய குளங்களை மையப்படுத்தி குடியிருப்புகளை ஏற்படுத்தினர். 

இதற்கு தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் பொதுவாக இருந்தபெருங்கற்காலப் பண்பாட்டின் தோற்றமே காரணமாகும்.வன்னிப் பிராந்தியத்தில் ஏறத்தாழ அதிகமான குளங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பல கைவிடப்பட்டு அந்த இடங்கள் மக்கள் வாழ முடியாத காடுகளாக காணப்படுகின்றது. அவற்றில் பலவற்றிற்கு தொன்மையான வரலாறுகள் உண்டு.

இற்றைக்கு 1700 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களையும் அவற்றின் சமகாலத்திற்குரிய பாளி இலக்கியங்களையும் ஆராய்ந்தால் அவற்றில் குறிப்பிடப்படும் இடப்பெயர்கள் பெரும்பாலும் குளத்தை மையப்படுத்தியதாகவே இருக்கிறது.

Viyugam News

19ம் நுற்றாண்டில் வன்னி பற்றி ஆராய்ந்த லூய்ஸி என்றஅறிஞர் தமிழகத்தைக் காட்டிலும் வன்னியில் தூய தமிழில் பெயர்இருப்பதற்கு அங்கிருக்கும் இடப்பெயர்கள் குளத்தை பின்னொட்டுச் சொல்லாகக் கொண்டிருப்பதே காரணம் என்கிறார்.

கட்டுக்கரை குளத்தை பொறுத்தவரை இங்கு பெருங்கற்காலபண்பாடு நிலவியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதனால் இதன் தோற்றத்தை பெருங்கற்காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு இடமுண்டு. ஆனால் கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்து பிரித்தானியர் காலம் வரை கால்வாய் அணைக்கட்டுகள் போன்றவற்றை அமைப்பதில் ஏற்பட்ட தொழிநுட்ப வளர்ச்சியில் கட்டுக்கரை தற்போதைய நிலைக்கு விஸ்தரிக்கப்பட்டது.

 இதனால் தொடக்க காலத்தில் இக்குளத்தை மையப்படுத்தி குடியிருப்புகளை ஏற்படுத்திய மக்கள் அவற்றை கைவிட்டு புதிய இடங்களுக்குச் சென்றுள்ளனர். அதனால்தான் எமது தொல்லியல் மேலாய்வில் குளத்திற்கு வெளியே கிடைத்த சான்றுகளை விட குளத்திற்கு உள்ளே தொன்மையான அதிகமான சான்றுகள் கிடைக்கக் காரணமாகும். 

அதிலும் குளம் பெருக்கெடுக்குங் காலங்களில் குளத்தின் ஆழமான பகுதியிலிருந்து அதிகமான சின்னங்கள் கரை ஒதுங்கி இருப்பதை காணமுடிகிறது. மேலும் இக்குளக்கட்டில் வடக்குப் பக்கமாக நீர் வெளியேறுகின்ற வாய்க்கால்கள் இரு மருங்கிலும் நீர் வற்றிய காலங்களில் அதிக தொல்லியல் சின்னங்களை சேகரிக்க முடிந்தது.

இந்த தொல்பொருள் சின்னங்கள் குளம் பெருக்கெடுத்த காலங்களில் கொண்டுவரப்பட்டவையாக இருக்கலாம் அல்லது குளத்துக்குவெளியே குடியிருந்த புராதன குடியிருப்புகளின் சான்றாக இருக்கலாம். ஏனெனில் குளத்துக்கு வெளியே காணப்படும் பல மண் மேடுகள் அண்மைக் காலங்களில் பிற தேவைகளுக்காக (இயற்கை மண்வரை) ஏறத்தாழ 5 அடி வரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட  குழிகளில் செறிவான தொல் பொருட் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வாதாரங்கள் குளத்துக்கு வெளியே பரந்த அளவில் புராதன குடியிருப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

நாம் தொல்லியல் ஆய்வை மேற்கொண்ட காலப்பகுதியில் கட்டுக்கரை குளப் பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த பௌதீக மாற்றங்களும் தொல்லியல் மேலாய்வில் விலைமதிக்க முடியாத அரிய பலதொல்பொருட்களை கண்டுபிடிக்க மிகச் சாதகமாக இருந்தன. 

இதில் கிடைத்த தொல்பொருட்கள் கட்டுக்கரை பிரதேசத்திற்கு மட்டுமின்றி இலங்கையின் பூர்வீக வரலாற்றுக்கும் புது வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளன. கட்டுக்கரை பகுதியில் கிடைத்த தொன்மைச் சான்றுகள் யாழ்ப்பாணத்துக்கும் முன்னோடியான தொன்மைக் குடியிருப்புகள் இங்கு இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

ஆயினும் இவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்பதை தொடர்ந்து மேற்கொள்ளும் ஆய்வுகளில்தான் உறுதிப்படுத்தமுடியும்.1970களில் இரணைமடுப்பகுதியில் இற்றைக்கு 12500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை கண்டுபிடித்த செரான் தெரனியகல இம்மக்கள் தென்மேற்கு மன்னார் வரை பரந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் மேலாய்வில் எம்முடன் பங்கெடுத்த தொல்லியல் திணைக்களத்தின் தொல்லியல் அகழ்வாய்விற்குப் பொறுப்பாக உள்ள திரு.மணிமாறன் கட்டுக்கரையில் மண் அகழப்பட்ட குழியில் இருந்து கற்கருவி ஒன்றை கண்டுபிடித்தார். இது கண்டெடுக்கப்பட்ட குழியின் மண் அடுக்குகள் குழம்பிய நிலையில் காணப்படுவதால் இக்கருவி பயன்படுத்தப்பட்ட காலத்தையும் அதன் பண்பாட்டையும் நிச்சயப்படுத்தி கூறமுடியாதுள்ளது.

இக்கருவிகளைத் தொடர்ந்து தமிழகத்திலும் இலங்கையிலும் முற்பட்ட கற்கால மனிதர்களைக் காட்டிலும் ஓரளவு நாகரீக முன்னேற்றமுடைய இடைக் கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று கருதக்கூடிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இம்மக்கள் குவாட் சேட் முதலான நுண்ணிய தொழிநுட்பத்துடன் கூடிய சிறிய கற்கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதனால் இம்மக்களது பண்பாடு இடைக்கற்காலம் அல்லது நுண்கற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.

கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்விலும் அரிதாக மேலாய்விலும் குவாட் சேட் கற்கருவிகளை ஆக்கும் போது உடைந்த கற்கள் என்பன அதிக அளவில் கிடைத்துள்ளன. இக்கற் கருவிகளை இரும்பின் பயன்பாட்டை முதலில் அதிகளவில் பயன்படுத்திய பெருங்கற்கால பண்பாட்டிலும் அரிதாகப் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் கட்டுக்கரையில் இக் கற்கருவிகள் தொடர்பான ஆதாரங்கள் அதிக அளவில் கிடைத்திருப்பது இப்பிரதேசத்தின் தொன்மைக் குடியிருப்புகள் ஆய்வில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் ஐயமில்லை.

கட்டுக்கரை தொல்லியல் மேலாய்வில் கிடைத்த ஆதாரங்களும் தென்னிந்தியா குறிப்பாக தென்தமிழகத்திலும் ஈழத்திலும் நாகரீக உருவாக்கத்திற்கு வித்திட்ட பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடைய தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இப்பண்பாட்டில் குறிப்பிட்ட தொல்லியல் மையத்திற்குள் குளம் வயற்பரப்பு குடியிருப்புகள் இடுகாடு என்பன ஒன்றிணைந்து இருப்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

மேலும் இப்பண்பாட்டிற்கு சிறப்பாக உள்ள கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்களின் உபயோகங்கள் இரும்பின் உபயோகம் என்பனஇலங்கை தென்னிந்திய பெருங்கற்கால வட்டத்தினுள் ஒன்றிணைய வைத்துள்ளது.

கட்டுக்கரைகுளத்தின் ஆரம்ப தோற்றம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்ட ஒன்றாகும். இதை அப்பண்பாட்டிற்குரிய மட்பாண்டங்கள் களிமண்ணுடன் நெல்லுமி வைக்கோல் கலந்து செய்யப்பட்ட சுடுமண் உருவங்கள் சட்டி பானைகள் என்பன குளத்தின் உள்ளேயும் வெளியேயும் அணைக்கட்டு குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்தின்றன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட தாழியின் உடைந்த பாகங்கள் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.பாலித்த வீரசிங்க அவர்கள் கூறும் போது இவை கட்டுக்கரை பிரதேசத்தின் பெருங்கற்கால சுடுகாடாக தாழியடக்கமுறை இருந்ததை காட்டுவதாக கூறுகின்றார்.

மேலும் இப்பாண்பாட்டு மக்களால் பயண்படுத்தப்பட்டவை எனக் கருதக்கூடிய கல்மணிகள் கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள் சங்கு வளையல்கள் என்பனவும் அதிகமாக கிடைத்துள்ளன.

இப்பொருட்களுடன் இவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்திய பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கற்கள் கண்ணாடிகள் சங்குகள் மட்பாண்டங்கள் அச்சுகள் இரும்புருக்கு சூலைகள் என்பனவும் கிடைத்துள்ளன. 

இவற்றை பேராசிரியர் இரகுபதி அவர்கள் தமிழக தொல்லியல் அறிஞர்களான இராசன் செல்வக்குமார் இரா.வேலு முதலானோர் பண்டைய காலத்திலேயே கட்டுக்கரை பிரதேசத்தில் இரும்புருக்கு கல்மணிகள் கண்ணாடிப் பொருட்கள் மட்பாண்டங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்கூடங்கள் இருந்ததற்கு முக்கிய ஆதாரங்கள் இவை எனக் குறிப்பிடுகின்றனர்.

கட்டுக்கரை தொல்லியல் மையத்தின் சிறப்பம்சங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபட்டது எனக் கூறக்கூடிய குளம் வயற்பரப்பு இடுகாடு என்பன குறிப்பிட்ட வட்டாரத்தினுள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த நான்கு அம்சங்களையும் ஏனைய பெருங்கற்கால தொல்லியல் மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

பண்டைய காலத்தில் கட்டுக்கரையும் அயல்நாடுகளும் கட்டுக்கரையில் வாழ்ந்த மக்கள் இற்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன்னரே அயல்நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பதற்கு நம்பகரமான தொல்லியல் ஆய்வுகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து கட்டுக்கரையில் தொழிநுட்பத்திறனும் நாகரீக முன்னேற்றமும் கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

இந்த உண்மையை கட்டுக்கரை தொல்லியல் மேலாய்வில் கிடைத்த பிற நாட்டு நாணயங்கள் இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடிப் பொருட்கள் என்பன உறுதிசெய்கின்றன. அவற்றுள் இங்கு கிடைத்த பெரும்பாலான நாணயங்கள் குளத்தின் கரையோரப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது சிறப்பாக நோக்கத்தக்கது. 

அவற்றுள் தென்னாசியாவில் முதன்முறை வெளியிடப்பட்ட முத்திரை நாணயங்களும் இலங்கையில் வெளியிடப்பட்ட திஸ்ஸ நாணயங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இவை இற்றைக்கு 2300ல் இருந்து 1900 ஆண்டுவரை பயன்பாட்டிலிருந்தவையாகும்.

இவற்றில் தொடர்ச்சியாக புராதன இஸ்லாமிய நாணயங்கள் மட்பாண்டங்கள் பல்லவ நாணயங்கள் (கி.பி.628) மேற்கத்தேய மட்பாண்டங்கள் சீன நாட்டு பீங்கான் வகைகள் (கி.பி.9-13) என்பனவும் கட்டுக்கரையில் புழக்கத்தில் இருந்துள்ளது.

இங்கு கிடைத்த சுடுமண் உருவம் ஒன்று ஆணுக்குரிய இயல்பான தோற்றத்தில் செய்யப்பட்டிருந்ததுடன் அதன் தலைப் பகுதி அரச வம்சத்திற்குரிய கிரீடம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. சுடுமண் உருவங்களை ஆய்வில் புலமையுடைய யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பாலித்த வீரசிங்க இச்சிற்பத்தை அரச வம்சத்துடன் தொடர்புடைய சிற்பம் என்று கூறுகின்றார்.

 இவ்வாதாரங்கள் இன்று காடாக காட்சி தரும் கட்டுக்கரை பிரதேசம் பண்டைய காத்தில் ஒரு நகரமாக இருந்ததை காட்டுகிறது என யாழ்ப்பாண மத்திய கலாசார திட்ட முகாமையாளர் திரு.லட்சுமண் சந்தன மைத்திரி பாலா கூறுகிறார்.

கட்டுக்கரை அகழ்வாய்வும் தொல்லியல் இந்துமத சின்னங்களும்

தமிழரின் பூர்வீக வரலாறும் பண்பாடுகளும் தொல்லியல் அகழ்வாய்வுகளால் வெளிக்கிளம்பும் என்பதற்கு கட்டுக்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வாய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுக் குழிகள் மூன்று மீற்றர் நீள, அகலம் கொண்ட ஐந்து ஆய்வுக் குழிகளில் அவற்றின்இயற்கை மண் அடையாளம் காணப்படும் வரை மேற்கொள்ளப்பட்டது.

மூன்று வேறுபட்ட காலத்துக்குரிய கலாசார மண் அடுக்குகளைக் கொண்ட இவ்வாய்வுக் குழிகளில் மூன்றாவது கலாசார மண் அடக்கில் செங்கட்டிகளால் ஆன அத்திபாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவ் அத்திபாரம் ஓர் ஆலயமாக அல்லது சமய சடங்குகள் நடைபெற்ற இடமாக இருந்திருக்கலாம்;.

இக்கட்டிட அத்திபாரத்தை ஒட்டியதாகவே சுடுமண், சிற்பங்கள், சிலைகள், மணிகள், தெய்வ வாகனங்களின் பாகங்கள், அகழ்விளக்குகள், தீபங்கள், சமயச்சின்னங்கள், சமய இலச்சினைகள், குறியீடுகள் என்பன பொறிக்கப்பட்ட சுடுமண் பாகங்கள், மட்பாண்டங்கள் போன்றவைகண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கு பல தெய்வ வழிபாடுகள் நினைவுபடுத்தும் வகையில் உருவங்கள் மற்றும் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டாலும் பண்டைய காலத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் நீர்நிலைத் தெய்வமான ஐயனார் வழிபாடே முக்கிய தெய்வமாக இருந்ததை அகழ்வின் போது கிடைத்த சான்றுகள் உறுதிசெய்கின்றன.

அவற்றுள் ஐயனாரின் முக்கிய வாகனமாக இருந்து வரும் யானை, குதிரை என்பவற்றின் நூற்றுக்கணக்கான உடற்பாகங்கள் குதிரை, யானை என்பற்றின் தலைப் பகுதிகள் தும்பிக்கைகள் 75ற்கும் மேற்பட்ட யானைத் தந்தங்கள், யானை, குதிரை, நந்தி முதலான வாகனங்களில் கழுத்தில் அணியப்பட்டிருந்த 50ற்கும் மேற்பட்ட மணிகள் என்பன சிறப்பாக குறிப்பிடத்தக்கன.

இவ்வாதாரங்களில் கிடைத்த இன்னொரு முக்கிய சான்றாக யானை அல்லது குதிரையின் மேலிருந்து பீடத்தில் தெய்வீக கோலத்தில் இரு கால்களையும் கீழே தொங்கவிட்ட நிலையில் இருக்கும் இரு பெண் தெய்வத்தின் சிற்பங்களாகும். இவை ஐயனாரின் இரு தேவியரையும் குறிப்பதாக இருக்கலாம். 

ஐயனார் இங்கு முக்கிய தெய்வமாக வழிபட்டிருந்தாலும் ஏனைய சைவ இந்து தெய்வங்களையும் வழிபட்டு வந்த மக்கள் தமது பொருளாதாரம், பாதுகாப்பு என்பவற்றை வேண்டி வழிபட்ட போதும் தமது குலதெய்வமான சிவன், அம்மன், முருகன், விநாயகர் முதலான தெய்வங்களை உருவமாக மண்ணில் செய்து காணிக்கையாக இவ்விடத்தில் வைத்து வழிபட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

இதற்கு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிவன் வழிபாட்டுடன் தொடர்புடைய ஆவுடையுடன் கூடிய லிங்க வடிவங்கள், நந்தியின் பாகங்கள், முத்தலைச் சூலங்கள், பிரைச் சந்திரன் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

சில பெண் உருவங்கள் சக்தி வழிபாட்டை பிரதிபலிக்கின்றன.வேல், மயில் சின்னங்கள் முருகனை நினைவுபடுத்துகின்றன. நாக வடிவங்கள் இங்கு நாக வழிபாடு இருந்திருக்கலாம் என்பதை காட்டுகின்றது.

சிறிய கலசங்களின் வாயிற் பகுதியில் இருந்து வெளிவரும் உருவங்கள் குடமுனி எனப்படும் அகத்தியர் வழிபாட்டை நினைவுபடுத்துகின்றன.அதிக எண்ணிக்கையில் விநாயகக் கடவுளை பிரதிபலிக்கும் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் விநாயகர் முக்கிய வழிபாட்டுத் தெய்வமாக இருந்திருக்கலாம் என்பதை காட்டுகின்றன.

இலங்கையில் இதுவரை கிடைத்துள்ள நம்பகரமான தொல்லியல் சான்றுகளாக இச்சமய சின்னங்கள் காணப்படுவதால் எதிர்காலத்தில்இந்து மதத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி எழும் ஆய்வுகளுக்கெல்லாம் கட்டுக்கரை தொல்லியல் கண்டுபிடிப்புகள் ஒரு தொடக்கப் புள்ளியாகஇருக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கை வரலாறுகள் கூறும் பாளி இலக்கியங்கள் கி.மு நூற்றாண்டில் ஆரம்பமாவதற்கு முன் இலங்கையில் இருந்த சிவன் ஆலயங்கள் பற்றி கூறுகின்றன. பாளி இலக்கியங்களிலும் சமகால கல்வெட்டுகளிலும் பிராமண சமூகம்  இலங்கை ஆசிய நாடுகளிலும் சமூகத்திலும் பெற்றிருந்த செல்வாக்கு பற்றிய ஆதாரங்கள் சமகாலத் தமிழகத்தில் காணமுடியாத ஒன்று. இவற்றை நோக்கும் போது ஈழத்து இந்து மதத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களின் செல்வாக்கும் கலந்திருந்தன என் கருதமுடியும். இதற்கு இந்த கட்டுக்கரை அகழ்வாய்வில் கிடைத்த சமயச் சின்னங்கள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

@tamilviyugam



No comments