Page Nav

HIDE

Breaking News:

latest

OMP ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு சர்வதேசத்தைக் ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு

மன்னார், செய்தியாளர், 24-08-2026, கைது செய்து விடுவிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடுவதே அரசு செய்யும் நியாயம்: OMP நிகழ்வுக்கு எதிராக மன...

மன்னார், செய்தியாளர், 24-08-2026,

கைது செய்து விடுவிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடுவதே அரசு செய்யும் நியாயம்: OMP நிகழ்வுக்கு எதிராக மன்னாரில் ஊடக சந்திப்பு

சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வைக் கொண்டாடும் அரசாங்கம், உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். விடுவிக்கப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதே பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்யும் நியாயமான செயலாக இருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

OMP ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுக்கு எதிர்ப்பு மற்றும் கூட்டு ஊடக சந்திப்பு

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின' நிகழ்வு குறித்து, வடக்கில் உள்ள குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மன்னாரில் (24) ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது தற்போதைய நிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சர்வதேசத்தைக் ஏமாற்றுவதற்கான 'கண்துடைப்பு' நிகழ்வு

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உறவினர்கள், "சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றாத அரசாங்கம், OMP உடன் இணைந்து இந்த தினத்தை நடத்துவது சர்வதேசத்திற்கு ‘உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட்டுவிட்டது’ என்ற போலி பிம்பத்தைக் காட்டவே. உண்மையிலேயே இந்த நிகழ்வை நடத்துவதானால், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையினரையாவது விடுவித்து, போராட்டங்களில் ஈடுபடும் தாயாரிடம் அவர்களின் பிள்ள ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் நடத்தப்படும் இந்த நிகழ்வு வெறும் கண்துடைப்பாகும்" எனச் சாடினர்.

நஷ்டஈடு வேண்டாம்; பிள்ளைகளின் உண்மையே தேவை

OMP என்பது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தோல்வியடைந்த பொறிமுறை எனக் குறிப்பிட்ட அவர்கள், "மாவட்டந்தோறும் பணத்தைக் கொடுத்து பிரச்சனையை மூடிமறைக்க அரசு பார்க்கிறது. எமக்கு நஷ்டஈடு தேவையில்லை, எங்களது பிள்ளைகளே தேவை. இல்லையெனில், அவர்களைக் கடத்தி படுகொலை செய்துவிட்டோம் என்பதை சர்வதேசத்தின் முன் அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அதை மறைக்கச் செய்யப்படும் முயற்சிகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்" எனக் குறிப்பிட்டனர்.

ஆவணப்படுத்தப்பட்ட கண்ணீர் கதைகள்: சிவில் சமூகத்தின் தரவுப் புத்தகம்

காணாமல் போனோர் பிரச்சனை வெறும் செய்திகளோடும் போராட்டங்களோடும் முடிந்துவிடவில்லை எனக் கூறிய அவர்கள், "கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் 300-க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எப்போது, எங்கு, யாரால் கடத்தப்பட்டார்கள் என்ற தரவுகள் அடங்கிய புத்தகத்தை சிவில் சமூகங்கள் உருவாக்கியுள்ளன. இந்த ஒவ்வொரு பக்கத்தின் பின்னாலும் பெற்றோரின் இரத்தமும் கண்ணீரும் உள்ளது. இவ்வளவு தரவுகள் இருக்கும் போது, அதை மறைத்து நஷ்டஈடு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஆதங்கப்பட்டனர்.

சர்வதேச பொறிமுறையும் வெளிப்படைத்தன்மையுமே ஒரே தீர்வு

தங்களுக்கு சர்வதேச தின கொண்டாட்டங்களோ அல்லது இழப்பீடுகளோ தேவையில்லை எனக் குறிப்பிட்ட உறவினர்கள், "சர்வதேச கண்காணிப்புடன் கூடிய தனி நீதிமன்றம் மற்றும் வெளிநாட்டுப் பொறிமுறையையே நாங்கள் கோருகிறோம். சர்வதேச நியமங்களைப் பேசும் அரசு, மக்கள் கேட்கும் சர்வதேச பொறிமுறையை அமல்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் விடுவிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்" என இறுதியாக வலியுறுத்தினர்.

No comments