Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கைக்கு கடத்த முயன்ற 7.5 லட்சம் சட்ட விரோத மாத்திரைகள் பறிமுதல் ஓட்டுநர் கைது

TAMILVIYUGAM.COM,01/10/2026, மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திர...

TAMILVIYUGAM.COM,01/10/2026,

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 286 கிலோ பீடி இலை பண்டல்களை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதியான தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை மற்றும் களிமண் குண்டு ஆகிய இடங்கள் சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால், கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்படுவதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் போலீசார் உச்சிப்புளி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், இம்மாத்திரைகள் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது உறுதியானது.

இதையடுத்து, மாத்திரைகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நபர், வாகனம் மற்றும் மாத்திரைகள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், வேதாளை கடற்கரை பகுதியில் மரைன் போலீசார் நள்ளிரவில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, போலீசாரைக் கண்ட கடத்தல்காரர்கள் கடற்கரையில் வீசிச் சென்ற 286 கிலோ எடை கொண்ட 10 பீடி இலை பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

@tamilviyugam

No comments