Page Nav

HIDE

Breaking News:

latest

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கு இவ்வாண்டு 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – கடற்றொழில் அமைச்சர்

TAMILVIYUGAM.COM யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகச் சுமார் 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செ...

TAMILVIYUGAM.COM

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகச் சுமார் 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துப் பொது நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (14.10.2026) மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியின் பயன்பாடு, திட்ட முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இன்றைய கூட்டத்திற்காக அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும் அவற்றின் திட்ட முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட முன்னேற்ற விபரங்கள் கோரப்பட்டிருந்தபோதிலும், மாவட்டச் செயலகம் மற்றும் மாகாண அமைச்சுகள் தவிர்ந்த ஏனைய பல நிரல் அமைச்சுகளின் கீழ் இயங்கும் திணைக்களங்களிடமிருந்து கோரப்பட்ட விடயங்கள் தற்போதையவரை கிடைக்கப்பெறாமை தொடர்பில் முதலில் சுட்டிக்காட்ட விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார். 

பொது நிதியைக் கையாளும் அனைத்து நிறுவனங்களுக்கும் இறுதி அறிவித்தலாக இதனைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை அனுமதிக்காகவும், அவற்றின் அமுலாக்க முன்னேற்றங்களை மேற்பார்வை செய்வதற்காகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிப்பது கட்டாயமானது எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிதி என்பது மக்களின் நிதியாகும். எனவே, பொதுநிதியைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் நடைமுறையிலுள்ள நிதி முகாமைத்துவ விதிமுறைகளையும் திட்ட அமுலாக்க நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதுடன், அபிவிருத்தித் திட்டங்களை உரிய அனுமதிகளுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களை தெரிவித்தார். 

அந்தவகையில், தேசிய சமூக சக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 335 கிராமிய செயற்றிட்டங்களுக்கு 886.96 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் யாழ்ப்பாணத்தின் அடையாளமாகத் திகழும் மந்திரிமனையைப் புனரமைப்பதற்கு 65 மில்லியன் ரூபாவும், விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்காக 203.067 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்தில் நீர் விநியோக வசதிகளை ஏற்படுத்துவதற்காக 496.71 மில்லியன் ரூபாவும், மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 0.7 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவுக்கான புதிய படகைக் கொள்வனவு செய்வதற்கு 350 மில்லியன் ரூபாவும், கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 42 வீதிகளைப் புனரமைப்பதற்கு 441.22 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேசிய சாலை அமைப்பில் உள்ளடங்காத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமான இடங்களைப் பாதுகாப்பதற்காக 62.95 மில்லியன் ரூபாவும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஐந்து செயற்பாடுகளுக்காக 17.67 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வீடமைப்புத் திட்டங்களின் கீழ், மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தில் 833 வீடுகளை அமைப்பதற்கு 1,666 மில்லியன் ரூபாவும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக 281 வீடுகளை அமைப்பதற்கு 281 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டங்களில் 59 வீடுகளைப் புனரமைப்பதற்கு 66 மில்லியன் ரூபாவும், வாழ்வுக்கு வலிமை வீட்டுத் திட்டத்தின் கீழ் 49 வீடுகளுக்கு 98 மில்லியன் ரூபாவும், சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 45 வீடுகளை அமைப்பதற்கு 45 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஆண்டில் மட்டும் 1,267 வீடமைப்புத் திட்டங்களுக்காக 2,156 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 148 திட்டங்களுக்கு 50.20 மில்லியன் ரூபாவும், சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான 16 திட்டங்களுக்கு 129.49 மில்லியன் ரூபாவும், வீடமைப்பைத் தவிர்ந்த ஏனைய சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு 182.12 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விவசாயக் கிளையின் ஊடான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு 3.32 மில்லியன் ரூபாவும், அனர்த்த முகாமைத்துவத்தின் கீழ் கட்டுமான முதலீட்டுச் செயற்பாடுகளுக்கு 38.20 மில்லியன் ரூபாவும், ஐ. றோட் (i-Road) செயற்றிட்டத்தின் கீழ் வீதிகளைப் புனரமைப்பதற்கு 1,072.41 மில்லியன் ரூபாவும், சிறிய நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 21.090 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, உற்பத்தித்திறன் கிராமம், அத்தம செயற்றிட்டம், நேர்மை வாரச் செயற்றிட்டம் மற்றும் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வடக்கு மாகாண சபையின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களையும் அமைச்சர் விபரித்தார். 

அந்தவகையில், உள்ளூராட்சி அமைச்சின் கீழ் 116 திட்டங்களுக்கு 645.001 மில்லியன் ரூபாவும், விவசாய அமைச்சின் கீழ் 61 திட்டங்களுக்கு 290.246 மில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சின் கீழ் 111 திட்டங்களுக்கு 472.782 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் கீழ் 36 திட்டங்களுக்கு 555.360 மில்லியன் ரூபாவும், மகளிர் விவகார அமைச்சின் கீழ் 56 திட்டங்களுக்கு 214.226 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 95 திட்டங்களுக்கு 1,221.251 மில்லியன் ரூபாவும், 'Clean Sri Lanka' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 751 திட்டங்களுக்கு 40.334 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்களுக்கு 189.835 மில்லியன் ரூபாவும், பொதுக்கல்வி நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 455 திட்டங்களுக்கு 243.278 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிரல் அமைச்சுகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் 61 திட்டங்களுக்கு 797.730 மில்லியன் ரூபாவும், ஏனைய திட்டங்களின் கீழ் 79 திட்டங்களுக்கு 1,013.671 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திட்ட முன்மொழிவுகள் மற்றும் முன்னேற்ற விபரங்களைச் சமர்ப்பிக்காத திணைக்களங்கள்தவிர்த்து, தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுத்து நோக்கும்போது, 2026ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்காகச் சுமார் 10,800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், உற்பத்தித்திறன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம்

2026ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலிடத்தைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்குத் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

அதேபோன்று, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இச்செயற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுத்த அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.

எதிர்காலத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியை மேலும் வலுப்படுத்துவதற்காக அனைத்து அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் ஒருமித்த நோக்குடன் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, திட்டங்களைத் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதுடன், அவற்றின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவிடம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தனது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.

@tamilviyugam


No comments